மலையாள இயக்குநரைப் பாராட்டிய மணிரத்னம்

By செய்திப்பிரிவு

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி தனது நேரலையில் பாராட்டியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், பிரபலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள்.

இந்த ஊரடங்கில் முதன்முறையாக, மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த நேரலை நடைபெற்றது.

இந்த நேரலையில் குஷ்பு, மாதவன், கவுதம் மேனன், அதிதி ராவ், மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் ஆகியோரும் கண்டுகழித்தனர். சிலர் மணிரத்னத்திடம் கேள்விகளையும் எழுப்பினர். லிஜோ ஜோஸ் நேரலையில் பார்க்கத் தொடங்கியவுடன் சுஹாசினி, "உங்களுக்குப் பிடித்தமான இயக்குநர், லிஜோ ஜோஸ் பெலிச்சேரி உங்களை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் உங்கள் படங்களைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார் லிஜோ. நான் உங்கள் படம் ஒன்று தான் பார்த்திருக்கிறேன்" என்று மணிரத்னத்திடம் தெரிவித்தார்.

அதற்கு மணிரத்னம், "லிஜோ நான் உங்களின் பெரிய ரசிகன். இன்று இருக்கும் மிகச் சிறந்த இயக்குநர்களில் நீங்கள் ஒருவர் என நினைக்கிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து சிறப்பான படங்களைக் கொடுங்கள்" எனத் தெரிவித்தார். உடனே 'ஜல்லிக்கட்டு', 'ஈமாயு' என சுஹாசினி சொல்ல 'அங்காமலி டைரீஸ்', 'ஆமென்' ஆகியப் படங்களின் பெயரை மணிரத்னம் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE