ட்விட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக்  போர்: சாந்தனு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ட்விட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் போர் தொடர்பாக நடிகர் சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகளவில் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சமயத்தில், ட்விட்டர் தளம் முழுக்கவே அது தொடர்பான செய்திகள், தகவல்கள், ஹேஷ்டேக்குகள் என இருக்கிறது. அதற்கு இடையே அஜித் - விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டி நடத்தி அனைவரையும் முகம் சுழிக்க வைத்து வருகிறார்கள்.

மகன் சஞ்சய்யின் நிலை குறித்து விஜய்யிடம் நலம் விசாரித்தார் அஜித் என்ற தகவல் எப்போது வெளியானதோ, அன்று முதலே இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் போட்டி தொடங்கியது. மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாள், ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள். இந்த இரண்டையும் வைத்து ஒருவருக்கு ஒருவர் எதிராக ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள்.

இந்த ட்ரெண்ட் நேற்று (ஏப்ரல் 17) முதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இரண்டு நடிகர்களையுமே அவதூறாகச் சித்தரித்து புகைப்படங்கள் பகிர்வு உள்ளிட்டவை இந்த ஹேஷ்டேக்கிற்குள் உள்ள ட்வீட்களை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம். இந்தப் போட்டி தொடர்பாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தல பற்றிய தவறான ஹேஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்குவதும், தளபதி பற்றிய தவறான ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்குவதும் சரியல்ல. ஒருதலைபட்சமாக இல்லாமல், இரு தரப்பையும் நான் கேட்டுக் கொள்கிறேன், நாம் ஒருவருக்கொருவர் மத்தியில் தான் வாழ வேண்டும், எதிராக அல்ல. அன்பு மற்றும் அமைதியோடு வாழ்வோம்.

இங்கு நான் பஞ்சாயத்து செய்ய வரவில்லை. அது என் வேலையும் இல்லை. எல்லோர் மீதும் இருக்கும் அக்கறையில் பேசுகிறேன். யாரும் யாரையும் விட்டுக் கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ஒரு கிண்டலை ஆரம்பித்தால் தல ரசிகர்கள் அதை நிராகரிக்க வேண்டும். தல ரசிகர்கள் ஆரம்பித்தால் தளபதி ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும். பதில் சொல்லத் தொடங்கும் போதுதான் (பிரச்சினை) வளர்கிறது"

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE