'வலிமை' வெளியீட்டுத் தேதி மாற்றம்

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றியமைத்துள்ளது படக்குழு.

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் நடிக்கத் தொடங்கினார் அஜித். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள். படத்தின் பிரதான காட்சிகளைப் படமாக்க ஒரு நீண்ட ஷெட்டியூல் ஒன்றைத் திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன.

ஆனால், அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படத்தை தீபாவளி வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வந்தார்கள். இந்த கரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால், தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது, கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக போய்விடலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிட்டுக் கொள்வோம் எனவும் முடிவு செய்துள்ளது படக்குழு.

'வலிமை' படத்தில் அஜித்துக்கு நாயகியாக ஹியூமா குரோஷி நடித்து வருகிறார். இதில் வில்லன்களாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE