கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இன்ஸ்டாவில் இணைந்த ஜானி டெப்- ஒரே நாளில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்

By செய்திப்பிரிவு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் என்ன செய்தென்று தெரியாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

தன்னுடைய முதல் பதிவாக ஒரு வீடியோ பகிர்ந்துள்ள ஜானி டெப் அதில் பேசியுள்ளதாவது:

இந்த தருணத்தில் மக்களின் வாழ்க்கையில் ஏற்கெனவே மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்ட கண்ணுக்கு புலப்படாத எதிரியைப் பற்றி பேசியாக வேண்டும். உலகத்துக்காகவும், எதிர்காலத்துக்காகவும், சமூகத்துக்காகவும், நமக்காகவும், இந்த இருண்ட காலகட்டத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ முயற்சிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இந்த ஊரடங்கு காலத்தில் நான் துவண்டுப் போய்விடக் கூடாது. இன்று ஆக்கப்பூர்வமாக நீங்கள் சிந்தித்தால் அது நாளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவும். வரையுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், உங்கள் மொபைல் போனில் படம்பிடியுங்கள், இசைக்கருவி வாசிக்க தெரிந்தால் வாசியுங்கள். இல்லையென்றால் கற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஜானி டெப் பேசியுள்ளார்.

ஒரே நாளில் ஜானி டெப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE