பணியிலிருக்கும் பெண் காவல்துறையினருக்கு கேரவேன், வசதியான கூடாரம்: இந்திய தயாரிப்பாளர் கில்ட் முடிவு

பணியிலிருக்கும் காவல்துறையினருக்கு, குறிப்பாக பெண் காவல்துறையினருக்கு நடிகர்கள் பயன்படுத்தும் கேரவேன்கள் மற்றும் அனைத்து வசதிகளும் இருக்கும் கூடாரங்களையும் தர இந்திய தயாரிப்பாளர்கள் கில்ட் முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என மக்கள் சேவையில் இருப்பவர்கள் மட்டும் அயராது பணியில் உள்ளனர்.

இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே முடிவு செய்து பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளது.

தற்போது 22 முக்கிய பகுதிகளில் பணியிலிருக்கும் காவல்துறையினருக்கு, முக்கியமாக பெண் காவல்துறையினருக்கு, படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும், முழு வசதியுடன் கூடிய கூடாரங்களும், கேரவேன்களும் தரப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஓய்வு நேரத்தில் இளைப்பாறவும் மற்றும் இயற்கை உபாதைகளுக்காகவும் இந்த வசதி செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும், மும்பை காவல்துறையினருக்கு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, இந்திய தயாரிப்பாளர் சங்கம், இந்திய திரை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம், மேற்கிந்திய சினிமா ஊழியர்கள் சங்கம் அனைத்தும் சேர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் தினக்கூலி பணியாளர்களுக்கு, நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தி உதவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE