கரோனா ஊரடங்கில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மணிரத்னம் உற்சாகமாகப் பதிலளித்துள்ளார்.
கரோனா வைரஸ் ஊரடங்கால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. அனைத்துப் பிரபலங்களுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ரசிகர்களோடு கலந்துரையாடி வருகிறார்கள்.
இந்த கரோனா ஊரடங்கில் முதன்முறையாக தனது மனைவி சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மணிரத்னம். எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல், அனைத்துக்குமே பதிலளித்துள்ளார்.
இந்த நேரலைக்கு வந்தவுடனே மணிரத்னம், "முதலில் ஒண்ணு சொல்லிவிடுகிறேன், நீங்கள் என்னால்தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தீர்களென்றால், நீங்கள் எப்படிப் படம் எடுத்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. என் மீது பழி போடக்கூடாது" என்று நகைச்சுவையுடனே கேள்விகளை எதிர்கொண்டார் மணிரத்னம்.
அதனைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளும், மணிரத்னத்தின் பதில்களும்:
எப்படி கதை, திரைக்கதை எழுதுவீர்கள்? அதில் அதை எழுதுவது அதிகக் கடினம்?
எதுவும் எளிதல்ல. எல்லாமே கடினம்தான். இந்த ஊரடங்கின்போது நான் ஒரு கதையெழுத உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.
மழை, ட்ரெய்ன், மலையாளிகள், இந்தியாவிலேயே படம் பிடிப்பது என உங்கள் படங்களில் அடிக்கடி சில விஷயங்களைப் பார்க்க முடிகிறது. நீங்கள் சிறு வயதில் பார்த்த, அனுபவித்த எந்த விஷயம் இதுபோல உங்கள் படங்களில் பிரதிபலிக்கிறது?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சினிமா என்பது வியாபாரம். எனவே அதை மனதில் வைத்து முடிவெடுப்பேன். கேரளா பக்கத்தில் உள்ளது, அங்கு எப்போதும் மழை இருக்கும். வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்துவதை விட இங்கு நடத்துவதில் செலவு குறைவு. மேலும் நான் எழுதும் கதைகள் எல்லாம் இங்கு நடப்பவையே. எனவேதான் இந்த விஷயங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. சினிமாவில் ரயில் தான் காட்சியாகப் பார்க்கும்போது அதிக உற்சாகமூட்டும் விஷயம். சினிமா கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றில், ரயில் ஸ்டேஷனுக்குள் வருவதைப் போலத் தான் காட்சி வைக்கப்பட்டது.. எனவே அது என் சிந்தனை கிடையாது. சினிமா ஆரம்பத்திலிருந்தே இருப்பது.
படத்தின் நிறத்தை எப்படி முடிவு செய்கிறீர்கள்?
அதை மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்தின் உணர்வு என்ன என்பதை முடிவு செய்வேன். அதுதான் படத்தொகுப்பு எப்படி செய்யப்பட வேண்டும், கேமரா எப்படி நகர வேண்டும், உணர்ச்சிகள் அதன் பிறகு நிறம் என எல்லாவற்றையும் முடிவு செய்யும். சில சமயங்களில் அந்தக் கதையே உங்களை ஒரு திசையில் கொண்டு செல்லும். அதுதான் சரி என்று தோன்றும். எனவே அப்போது கதையே உங்களுக்காக அதை முடிவு செய்யும்.
நான் உங்கள் படங்கள் எல்லாவற்றையும் பல முறை பார்த்திருக்கிறேன். திரையில் அந்த மாயாஜாலத்தை எப்படிக் கொண்டு வருகிறீர்கள்? சில காட்சியமைப்புகள் என்னை பிரமிக்க வைத்துள்ளன. எப்படிச் சாத்தியப்படுகிறது?
எனக்கு அதற்காகத்தானே சம்பளம் தருகிறார்கள். எனது வேலையை எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்ய வேண்டும். எல்லா காட்சிகளையுமே கஷ்டப்பட்டுத்தான் எடுக்கிறோம். ஆனால் சில காட்சிகள் மட்டும்தான் பிரமிக்க வைத்துள்ளது என்கிறீர்கள். அடுத்த முறை இன்னும் அதிக எண்ணிக்கையிலான காட்சிகளைச் சிறப்பாக வைக்க முயல்கிறேன்.
திரைக்கதையை காகிதத்தில் எழுதுகிறோம். நல்ல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் அது திரைப்படமாக மாறுகிறது. அதில் ஒரு சிறிய மாயாஜாலத்தைக் கொண்டு வர முடியுமென்றால் அது காகிதத்தில் இருந்த வடிவத்திலிருந்து வேறொரு தளத்துக்குச் செல்கிறது.
எப்போது மலையாளப் படம் இயக்குவீர்கள்?
பணம் போட தயாரிப்பாளர் கிடைத்தால் எடுப்பேன்.
உங்களது எந்தப் படத்தை இரண்டாம் பாகம் எடுப்பீர்கள்?
'பொன்னியின் செல்வன்' அப்படித்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பாகங்களாக.
சுஹாசினியை நடிக்க வைப்பீர்களா? சமூக அரசியல் படங்கள் எடுப்பீர்களா?
அது தானாக நடக்க வேண்டும். அவருக்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சமூக அரசியல் படமாக இருந்தாலும் சரி. இயல்பாக, தானாக நடந்தால், கண்டிப்பாக நடக்கும்.
நீங்க நல்லவரா கெட்டவரா?
தெரியலியே.
'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு உங்கள் திட்டம் என்ன? அடுத்த இந்திப் படம் எப்போது?
'பொன்னியின் செல்வன்' எப்போது முடியும் என்று தெரியவில்லை. இப்போது இந்த இடைவெளியில் ஒரு கதையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதை 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு எடுக்கலாமா என்று பார்க்கிறேன். ஒரு வேளை அது நேரடியாக இந்தியில் இருக்கலாம்.
எது உங்களுக்கு மிகப்பெரிய சவால்?
சினிமாவில் இருப்பதால் எதாவது ஒரு இடரை (ரிஸ்க்) அனுபவிக்காமல் இருக்க முடியாது. எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு யோசனையும், எல்லாமே இடர் தான். ஒவ்வொரு திருப்பமும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இந்த சவால் ஓயாது என்பதுதான் இந்தத் துறையில் சிறப்பான விஷயம். ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஒரே பிரச்சினை வராது. எனவே நாம் எப்போதுமே எதிர்வரும் சவாலுக்குத் தயாராக இருக்க முடியாது. நாம் அதைக் கையாளத்தான் வேண்டும்.
நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறதென்றால், அதனால் உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்றால், என்ன கேள்வி கேட்பீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவ்வளவு நாட்கள் எங்கிருந்தாய் என்றுதான் கேட்பேன். ஏன் மறைந்து கொண்டிருந்தாய். இப்போது என்ன நடந்தது என்று கேட்பேன்.
இந்த ஊரடங்கு நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள், சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன?
சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறேன், வீட்டிலேயே இருக்கிறேன், இதுதான் எனது மிகப்பெரிய பங்களிப்பு. இந்த நேரத்தில் அமைதியாக, ஜென் மனநிலையில் இருக்கிறேன், எழுத முயல்கிறேன், முடியவில்லை என்றால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பொறுமை காக்கிறேன். விழிப்புடன், அக்கறையுடன் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். நாளை நல்லபடியாக விடியும் என்று நம்புகிறேன்.
நீங்கள்தான் ஒளிப்பதிவில் உணர்ச்சிகளைச் சொல்ல முதன் முதலில் பயன்படுத்தியவர், அது எப்படிச் சாத்தியப்பட்டது? ஒளிப்பதிவாளரை எப்படி தேர்வு செய்வீர்கள்?
இல்லை, எனக்கு முன்பே பலரும் ஒளிப்பதிவில் உணர்ச்சிகளை என்னை விட சிறப்பாகக் காட்டியிருக்கின்றனர். சினிமா என்ற ஊடகத்தில் அதுவும் ஒரு பங்கு என நினைக்கிறேன். சத்யஜித் ரேவில் தொடங்கி தேசிய அளவில், சர்வதேச அளவிலும், இந்த விஷயத்தில் நிறைய ஆசான்கள் உள்ளனர். இங்கு ஸ்ரீதர், பீம்சிங், பந்துலு என நிறைய பேர் இருந்திருக்கின்றனர்.
நான் சொல்ல நினைக்கும் கதையை என்னுடன் சேர்ந்து சொல்ல ஆசைப்படுபவர்களைத் தேடுகிறேன். வெறும் ஒளிப்பதிவாளரை அல்ல. நான் பணியாற்றியவர்கள் கதையில், ஒட்டுமொத்தப் படத்தில் ஆர்வம் காட்டியவர்கள். வெறும் ஒளிப்பதிவில் மட்டுமல்ல. ஒளிப்பதிவாளர் தான் நான் யோசிக்கும் விஷயங்கள் சரியாக வருமா, வராதா என்று சொல்லும் முதல் நபர். இன்று நமக்கு மானிட்டர் இருக்கிறது. நடிப்பதைப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில் அதெல்லாம் கிடையாது.
கிரேனில் உட்கார்ந்திருப்போம், அருகே இருக்கும் ஒளிப்பதிவாளரால் தான் பார்த்து, அந்தக் காட்சி எப்படி வருகிறது என்பதைச் சொல்ல முடியும். நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago