எம்ஜிஆருக்கு  வசூல் ராஜா பட்டம்; அதிக ரசிகர் மன்றங்கள்;  மார்க்கெட்டை உயர்த்திய ‘மதுரை வீரன்’ ரீலிஸாகி 64 வருடங்கள்! 

By வி. ராம்ஜி

முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.

இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.

அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.

இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.

எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.

இந்த சமயத்தில்தான் லேனா செட்டியாரின் ‘மதுரை வீரன்’ படத்துக்கு ஒப்பந்தமானார் எம்ஜிஆர். யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில், பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, ஓஏகே.தேவர், ஈவி.சரோஜா, எம்.ஆர்.சந்தானலட்சுமி முக்கியமாக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்தனர்.

படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.

அட்டகாசமான சினிமாதான், மதுரை வீரன் கதை. பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தில் மாலை. இது தேசத்துக்கு ஆகாது என்கிறார் அரச ஜோதிடர். தேசத்தையும் ராஜ்ஜிய பதவியையும் காப்பதற்காக குழந்தையைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியான என்.எஸ்.கே.வும் அவரின் மனைவி மதுரமும் குழந்தையைப் பார்க்கிறார்கள். வளர்க்க முடிவு செய்கிறார்கள். ‘வீரன்’ எனப் பெயர் சூட்டுகிறார்கள். இந்த வீரன் என்கிற சூரன் தான், எம்ஜிஆர். இந்தக் குழந்தையால் தேசத்துக்கே ஆபத்து என்று சொல்லப்பட்ட கதை, நிஜத்தில் பொய்யானது. எம்ஜிஆரின் அரசியலும் அவரின் ஆட்சியும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது நிஜ சரித்திரம்.

காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சிந்தாமணி தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.

1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.

எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் வசூல் ராஜா என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உயருவதற்குக் காரணமாக இருந்த ‘மதுரை வீரன்’ வெளியாகி, 64 வருடங்களாகிவிட்டன! இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக மக்களின் மனங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ‘மதுரை வீரன்’ எம்ஜிஆர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE