இன்று தமிழ் சினிமா பெருமளவில் ஜனநாயகமடைந்திருக்கிறது. வெவ்வேறு கதைக் களங்கள், பல நாயகர்களைக் கொண்ட மல்டி ஸ்டாரர் படங்கள் மையக் கதாபாத்திரம் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பல கதாபாத்திரங்களையும் பல கதை இழைகளையும் கொண்ட படங்கள், பெண் கலைஞர்களை மையப்படுத்தி படங்கள் என அனைத்துக்கும் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இப்போதைய நாயக நடிகர்களின் வகை மாதிரிகளும் அவர்களின் பரிசோதனை முயற்சிகளின் எல்லைகளும் கூட வெகுவாக விரிவடைந்திருக்கிறது.
நாயக நடிகர், நகைச்சுவை நடிகர், துணை நடிகர், வில்லன் நடிகர் என்ற வழக்கமான சட்டகங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அல்லது அவற்றில் இருந்து கொண்டே வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதிக்கும் இளம் நடிகர்கள் அதிகரித்துவிட்டார்கள். கதாநாயக நடிகர்களிலும் தமக்கென்று ஒரு இமேஜை வளர்த்துக்கொள்ளாமல் எல்லா வகையான படங்களிலும் நடிப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். திரை வணிகச் சூழல் இத்தகைய மாற்றங்களை அடைவதற்கு முன்பே இதையெல்லாம் சோதித்துப் பார்த்த அரிதான நடிகர்களில் ஒருவர் சித்தார்த்.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சித்தார்த் புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து தமக்கென்று தனிப் பாணியை உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் முத்திரை பதித்த நாயகர்களில் முக்கியமானவர்.
முத்தான முதல் வாய்ப்புகள்
சென்னையில் பிறந்து வளர்ந்து மும்பையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவரான சித்தார்த எம்.பி.ஏ படித்துவிட்டு இந்திய சினிமாவை தலைநிமிரச் செய்த இயக்குநரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றியிருந்தாலும் நடிகராவது அவருடைய விருப்பமாக இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இயக்குநர் ஷங்கரிடமிருந்து அழைப்பு வந்தால் யாரால் மறுக்க முடியும். அதுவும் முதல் படத்திலேயே ஷங்கர் படத்தின் கதாநாயகன் என்றால் சினிமாவே பிடிக்காதவர்கள்கூட மனம் மாறிவிடுவார்கள் எனும்போது சினிமாவுக்குள் வந்துவிட்ட சித்தார்த்தால் எப்படி மறுக்க முடியும்? இதுவே சித்தார்த்தை ஒரு நடிகராக மாற்றியது.
ஷங்கர் இயக்கத்தில் அவரது பிரம்மாண்ட முத்திரையுடன் 2003-ல் வெளியானது ‘பாய்ஸ்’. மையக் கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் ஷங்கருக்கென்று உருவாகியிருந்த நட்சத்திர மதிப்பாலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களாலும் படத்துக்கு மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி இளைஞர்களை ஓரளவு கவர்ந்தாலும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரத் தவறியது. ஆனால் அந்தப் படத்தில் நடித்தவர்களில் சித்தார்த், பரத் நகுல், ஜெனிலியா நால்வரும் நடிகர்களாகத் தடம் பதித்துவருகிறார்கள். தமன் இசையமைப்பாளராக வெற்றிகரமாக இயங்கிவருகிறார்.
இவர்களில் சித்தார்த் வெவ்வேறு வகையான படங்களில் நடித்து தனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக்கொண்டார். ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் விட்டேத்தியான மனநிலை கொண்ட வெளிநாடு போகத் துடிக்கும் நவீன இளைஞனாக நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு நற்பெயரை வாங்கிக்கொடுத்தது.
மொழி எல்லைகளைத் தாண்டி
தொடக்க ஆண்டுகளிலேயே மொழி எல்லைகளைக் கடந்தார் சித்தார்த். பிரபுதேவா இயக்குநராக அறிமுகமான ‘நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா” என்ற தெலுங்கு திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்தது. அடுத்து ‘பொம்மரிலு’ படத்தின் வெற்றி அவரை தெலுங்கர்களின் ‘மனவாடு’ ஆக்கியது.
இடையில் இந்தியில் ‘ரங் தே பசந்தி’ படத்தில் அமீர் கான், மாதவனுடன் நடித்தார். அந்தப் படத்தில் புரட்சிவீரன் பகத் சிங்காக நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றார்.
தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் வெற்றி அவருக்கு நல்ல இடத்தைப் பெற்றுத் தந்தது. பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படம் ஏற்கெனவே அவர் இயக்கத்திலேயே குறும்படமாக வெற்றி பெற்றது. குறும்படத்திலிருந்து திரைப்படமாக்கப்பட்ட முதல் படம் இதுதான். பிறகு இதுவே தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டானது. குறும்படங்கள் திரைப்படங்களாகின அல்லது குறும்பட இயக்குநர்கள் திரைப்படத் துறைக்குள் நுழைந்தார்கள். ’காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை சித்தார்த்தே தயாரிக்கவும் செய்தார் என்பது சோதனை முயற்சிகள் மீதான அவரது தாகத்துக்குச் சான்று.
முத்திரைகளில் சிக்காதவர்
இந்தப் படங்களின் மூலம் சித்தார்த் ஒரு ஹைகிளாஸ் இளைஞர் என்று ஏ சென்டர் படங்கள் மட்டுமே அவருக்கு உகந்தவை என்றும் ஒரு எண்ணம் உருவானது. அந்த முத்திரைக்குள் சிக்கிக்கொள்ளாமல் வெவ்வேறு கதாபாத்திரங்களில், கதைக்களங்களில் நடிக்கத் தொடங்கினார்.
வெற்றிமாறன் தயாரித்த ‘உதயம் என்.ஹெச் 4’-ல் லோக்கல் இளைஞனாக நடித்தார். சுந்தர்.சியின் ‘தீயா வேல செய்யணும் குமாரு’ மூலம் முழுநீள காமெடிப் படத்திலும் நடிக்க முடியும் என்று காட்டினார்.
2014 அவருடைய திரை வாழ்வில் முக்கியமான ஆண்டு. கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது. அறிவுஜீவிகளாலும் கொண்டாடப்பட்டது. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத் தலைவன்’ 1930-கள், 40-களில் இயங்கிய தமிழ் நாடகக் குழுக்களைப் பற்றியது. இந்த வரலாற்றுப் புனைவு படத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் சாயலில் அமைந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சித்தார்த்.
பலவகைப் படங்கள்
அடுத்த சில ஆண்டுகளில் ’எனக்குள் ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என வெவ்வேறு வகைமாதிரிகளைச் சேர்ந்த படங்களில் நடித்தார். ‘அவள்’ படத்தைத் தயாரித்து திரைக்கதை வசனத்திலும் பங்களித்தார். கதையளவில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் மிரட்டிய ‘அவள்’ தமிழில் சர்வதேச தரத்திலான திகில் படமாக அமைந்தது.
தமிழில் ஆழங்கால் பதித்தவாறே தெலுங்கு, மலையாள, இந்தி, ஆங்கிலப் படஙளிலும் ’லீலா’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சமூக அநீதிக்கு எதிரான குரல்
சினிமாவில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே சமூகப் பிரச்சினைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும் ஆதரவற்றவர்களுக்கு தன்னால் இயன்ற பணிகளைச் செய்துகொண்டும் இருக்கிறார். 2015 பெருவெள்ளம் சென்னையை சூறையாடியபோது களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்காற்றினார். அது திரைக் கலைஞன் என்பதைத் தாண்டி ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள குடிமகனாகவும் அவரை அடையாளப்படுத்தியது,.
ட்விட்டரில் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார். மத்திய மாநில அரசுகளைத் துணிச்சலாகக் கேள்வி கேட்டு விமர்சித்தார். அதேபோல் ஹைதராபாத் என்கவுன்ட்டர் போன்ற பல விஷயங்களில் பொதுப் புத்திக்கு எதிரான கருத்துகளைப் பேசினார். இவற்றுக்காகப் பலரது வெறுப்பையும் தொடர் தாக்குதலையும் எதிர்கொண்டாலும் அசராமல் தன் நிலைப்பாடுகளை துணிச்சலாக முன்வைத்தார். அரசுகளைப் பகைத்துக்கொண்டால் தன் திரைப்படங்களுக்குப் பிரச்சினை வரும் என்றும் பொதுப்புத்திக்கு மாறான கருத்துகளைச் சொன்னால் தனக்கான மக்கள் ஆதரவு குறையும் என்றெல்லாம் யோசிக்காமல் அசாத்தியமான துணிச்சலுடனும் நேர்மையுடனும் இயங்கினார். சமீபமாக தனது ட்விட்டர் பக்கத்தினை நீக்கிவிட்டு அமைதியாக இருந்து வருகிறார்.
வருங்காலத் திட்டங்கள்
தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வாலுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மட்டுமல்லாமல் சித்தார்த் நடித்துவரும் மற்ற படங்களும் அவரது திரைப் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்பலாம்.
ஒரே வகைமாதிரிக்குள் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் பரீட்சார்த்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டே கமர்ஷியல் படங்களிலும் வெற்றிகரமாக இயங்கிவரும் அரிதான நடிகர்களில் ஒருவரான சித்தார்த் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க நமது வாழ்த்துகள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
11 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago