தமிழ் சினிமாவில் பல நாயக நடிகர்கள் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். திரைவானின் நட்சத்திர மண்டலத்தில் பட்டொளி வீசிப் பறந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்தத் தனித்தன்மையைத் தாண்டி ஒரு கலைஞனாக சில அரிதான குணங்கள், பண்புகள் இருக்கும். அப்படி அரிதான குணங்களைக் கொண்ட அசத்தல் நாயகன்தான் விக்ரம். தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதோடு பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவர் மனதிலும் ஒரு மரியாதையான இடத்தைப் பெற்றிருக்கும் விக்ரம் நம் காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய நாயகன் என்பதில் சந்தேகமில்லை.
பத்தாண்டுப் போராட்டம்
1966 ஏப்ரல் 17 அன்று பிறந்தவரான விக்ரம் ரஜினி கமலுக்குப் பிறகு இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் வயதில் மூத்தவர். ஆனால் இளமைப் பொலிவு மிக்க தோற்றம், வலுவான உடல் கட்டு, அசாத்திய உழைப்பு ஆகியவற்றில் 1990-களில் பிறந்தவர்களாக இருக்கக்கூடிய இளம் நடிகர்களுக்கு இணையாகப் போட்டி போடுகிறார்.
1990-ம் ஆண்டில்தான் விக்ரமின் திரைப் பயணம் தொடங்கியது. ரஜினி, கமல் தவிர இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவருக்கும் முன்பாகவே சினிமாவுக்கு வந்தவரும் விக்ரம்தான். மாடலிங் செய்துகொண்டிருந்த விக்ரம் ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநர் ஸ்ரீதரால் தன் படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதர் இயக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் அவர்தான் கதாநாயகன். 1991-ல் வெளியான இந்தப் படத்துக்கு முன்பாக 1990-ல் வெளியான ‘’என் காதல் கண்மணி’ படத்தின் கதாநாயகனாக தமிழ்த் திரையில் அறிமுகமாகிவிட்டார் விக்ரம். அதன் பிறகு இன்னொரு முன்னோடி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’ படத்தில் நடித்தார். அடுத்ததாகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ படத்தில் நடித்தார்.
» மார்வெல் படங்களுக்கு இந்தியாவில் இவ்வளவு வரவேற்பா? - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆச்சர்யம்
» மனம் மிகவும் வலிக்கிறது - மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு அனுபம் கேர் கண்டனம்
இந்தப் படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்தன. விடா முயற்சியின் முன்னுதாரணமாகத் திகழும் விக்ரமுக்கு தொடக்கத்திலிருந்தே அந்தப் பண்பு இருந்து வந்தது. தமிழில் நாயகனாக நடித்தவர் மலையாளம், தெலுங்கு படங்களில் துணை நாயகனாகவும் சில படங்களில் எதிர்மறை வேடத்திலும்கூட நடித்தார். ’புதிய மன்னர்கள்’, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘உல்லாசம்’ எனத் தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதே தவிர ஒரு நாயக நடிகராக அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரவில்லை.
1990-கள் முழுக்க கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஒரு நிலையான இடத்துக்காகப் போராடிக்கொண்டிருந்தார் விக்ரம். சினிமாவில் முதல் சில படங்களிலேயே முன்னணி இடத்தைப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் முன்னணி நடிகரானவர்கள் இருக்கிறார்கள். விக்ரம் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல. அந்த வகையைச் சேர்ந்தவர்களில் விக்ரம் அளவுக்கு அளப்பரிய சாதனைகளைச் செய்து இத்தனை ஆண்டுகளாக நட்சத்திர ஏணியில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் மிகச் சிலரே.
காந்தியின் தமிழ்க் குரல்
1990-களில் விக்ரம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தார் என்பது இன்றைய 2k கிட்ஸுக்குப் புதுத் தகவலாக இருக்கலாம். அதைவிடப் பின்னாட்களில் தனது சக போட்டியாளரான அஜித்துக்கு அவர் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்குமே ஆச்சரியமளிக்கும். அஜித்தின் அறிமுகப் படமான ‘அமரவாதி’யில் அவருக்குக் குரல் கலைஞராக செயல்பட்டவர் விக்ரம்தான். அஜித் மட்டுமல்லாமல் பிரபுதேவா (காதலன்), அப்பாஸ் (காதல் தேசம்,) ஆகியோருக்கும் குரல் கொடுத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்த ரிச்சர்ட் அட்டபரோவின் ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்குக் குரல் கொடுத்தவரும் விக்ரம்தான். இதிலும் என்ன ஒரு வெரைட்டியைக் காட்டியிருக்கிறார்!!! டப்பிங் கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை அதிலும் விருதுகளைக் குவித்திருப்பார் விக்ரம்.
கலைஞானிக்கு இணையான அர்ப்பணிப்பு
1999 டிசம்பரில் வெளியான ‘சேது’ விக்ரமுக்கான முதல் பிரேக்காக அமைந்தது. பாலுமகேந்திராவின் பாசறையிலிருந்து வந்த முதல் படைப்பாளியான பாலா இயக்குநராக அறிமுகமான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைக் குவித்து மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றதால் மட்டும் விக்ரமுக்கு முக்கியமான படம் அல்ல. உண்மையில் விக்ரம் யார், ஒரு கலைஞனாக அவரது வீச்சு என்ன அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்து திரையுலகத்தினரின் கண்களைத் திறக்க வைத்தது இந்தப் படம்தான்.
’சேது’ படத்தில் ஏர்வாடி மனநல விடுதியில் அடைக்கப்படுபவராக நடிப்பதற்காக 15 கிலோ உடல் எடையைக் குறைத்தார் விக்ரம். உடல் எடை மட்டுமல்லாமல் கண்கள், முகம், உடல்மொழி என அனைத்திலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து காட்டினார். அதுவரை கமல்ஹாசன் என்ற ஒருவர் மட்டுமே இப்படி எல்லாம் செய்ததைப் பார்த்து வந்த திரையுலகம் அவர் அளவுக்கு ஒரு கதாபாத்திரத்துக்காக மெனக்கெடும் இன்னொரு அர்ப்பணிப்பு மிக்க கலைஞன் கிடைத்துவிட்டதை உணர்ந்து கொண்டாடத் தொடங்கியது. அடுத்ததாக ‘காசி’ படத்தில் பார்வையற்றவராக நடித்தபோதும் அதே போன்ற மெனக்கெடல்களைச் செய்து விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் விக்ரம்.
தேடிவந்த வணிக வெற்றிகள்
ஆனால் இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சிகளை மட்டும் செய்துகொண்டிருந்தால் விக்ரம் ஒருவேளை ஆர்ட் ஃபிலிம் நடிகராகவும் விருதுகளுக்கான கலைஞனாகவும் ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும். பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பேர் போன கமலே தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலும் காமெடிப் படங்களிலும் நடித்து தன் வணிகச் சந்தை மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். விக்ரம் வணிகப் பாதையிலும் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தினார். உண்மையில் வணிக சினிமாக்களிலேயே வித்தியாசமான கதாபாத்திரங்கள். கடுமையான உடல்சார்ந்த மெனக்கெடல், அருமையான நடிப்பு ஆகியவற்றைக் கொடுத்து புதிய பாணியை உருவாக்கிக்கொண்டார்.
தரணி இயக்கிய ‘தில்’, ‘தூள்’, சரண் இயக்கிய ‘ஜெமினி’, ஹரி இயக்கிய ‘சாமி’ ஆகிய படங்கள் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில் விக்ரமை ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக்கின. பக்கா கமர்ஷியல் படங்களிலும் தன்னால் சிறப்பாகப் பொருந்த முடியும் என்று நிரூபித்தார் விக்ரம். தவிர கெட் அப் சேஞ்ச், உடல் மெனக்கெடல் இல்லாமல் கமர்ஷியல் படங்களில் தன்னால் இயல்பான நடிப்பைச் சிறந்த வகையில் வழங்க முடியும் என்று விக்ரம் நிரூபித்த படங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம்.
முதல் தேசிய விருது
கமர்ஷியல் மாஸ் படங்களில் நடித்துக்கொண்டே பாலாவுடன் மீண்டும் கைகோத்து ‘பிதாமகன்’ படத்தில் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் சித்தனாக நடித்திருந்தார். 'சேது', 'காசி' படங்களை விட மிகத் தீவிரமாக தன் உடலின் நிறம் உட்பட அனைத்தையும் மாற்றி நடித்தார். வசனமே பேசாமல் நடித்த அந்தப் படத்துக்கு 2003-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்க் கலைஞன் ஆனார்.
தமிழ் சினிமாவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குநர்களுடன் இணைவது நடிகர்களின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இயக்குநர்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர்கள். விக்ரமும் அந்தப் பாய்ச்சல் விரைவிலேயே நடந்தது. ஷங்கருடன் அவர் இணைந்த ‘அந்நியன்’ படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் அப்பாவி பிராமண இளைஞனாகவும் நவநாகரிக ரோமியோவாகவும் தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் அந்நியனாகவும் மாறும் மல்டிபிள் பர்சனாலிடி டிசார்டர் கொண்டவராக நடித்த விக்ரம் நடிப்பில் அசத்தினார். அதேநேரம் பரபரப்பான கமர்ஷியல் படமாகவும் அது அமைந்திருந்தது.
உருகவைத்த நடிப்பு
அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்த ‘ராவணன்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இதிலும் விக்ரமின் நடிப்பு பேசப்பட்டது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக இருமொழிகளில் எடுக்கப்பட்ட ஒரே படத்தில் தமிழில் நாயகனாகவும் இந்தியில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் விக்ரம்.
ஒரு சின்ன சுணக்கத்துக்குப் பிறகு 2011-ல் வெளியான ‘தெய்வத் திருமகள்; விக்ரமின் அசாத்திய நடிப்புத் திறமையை மீண்டும் பறைசாற்றியது. ஐந்து வயதுக் குழந்தையின் மனவளர்ச்சியைக் கொண்டவராக இந்தப் படத்தில் நடித்திருந்த விக்ரம் உருக்கமான காட்சிகளில் தன் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை சில தருணங்களில் கண்ணீர் சிந்த வைத்தார் என்றால் மிகையாகாது.
உயிரைப் பணயம் வைத்த உழைப்பு
இதற்குப் பிறகு ஷங்கருடன் இரண்டாவது முறையாக விக்ரம் இணைந்த ‘ஐ’ தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்காக ஒரு நடிகன் உடலளவிலும் மனதளவிலும் எடுக்கக்கூடிய மெனக்கெடல்களை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு விரிவுபடுத்தின. அந்நியனைப் போலவே இதிலும் முற்றிலும் வெவ்வேறு உடலமைப்புகளைக் கொண்ட மூன்று கெட்டப்புகளில் தோன்றினார் விக்ரம். ஆணழகன் போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும் பாடி பில்டராகவும். சர்வதேச பிராண்டுகளின் அழகான மாடலாகவும் கொடூர உடல் சிதைவுக்குள்ளான அரியவகை நோயாளியாகவும் தோன்றினார். இதில் மூன்றாவது வேடத்துக்காக தன் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்தார் விக்ரம்.
‘ஐ’க்குப் பிறகு 2016-ல் வெளியான ‘இருமுகன்’ தவிர விக்ரமுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் படமும் வணிக வெற்றியும் அடையவில்லை விமர்சகர்களின் பாராட்டையும் பெறவில்லை. அவரது படங்களுக்கிடையிலான கால இடைவெளியும் அதிகரித்துவிட்டது. அதில் அவரது தவறு எதுவும் இல்லை. ஆனால் இதன் மூலமாக அவர் முன்னணி அந்தஸ்தில் இல்லை என்பது போன்ற மாயை உருவாகியிருக்கிறது.
இங்குதான் இருக்கிறார்! இன்னும் பல சாதனைகள் புரிவார்!
ஆனால் இது மாயை மட்டும்தான். விக்ரம் என்றுமே முன்னணி நாயகனாகவே இருக்கிறார். அதேபோல் நடிப்பில் அவர் அடுத்தடுத்த படங்களில் என்னென்ன புதுமைகளைச் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ’கோப்ரா’ படத்தில் குறைந்தபட்சம் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது இது தவிர மணிரத்னத்தின் கனவுத் திட்டமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கல்கியின் சாகாவரம் பெற்ற இந்த சரித்திரக் கதையில் விக்ரமுக்கு என்ன வேடம் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆதித்த கரிகாலன் வேடம்தான் அவருக்கு என்று ஊகிக்கலாம். தமிழ் வாசகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்த ஆதித்த கரிகாலனுக்கு விக்ரம் எப்படி திரையில் உயிர் கொடுத்திருப்பார் என்ற யோசனையே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இது தவிர கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஸ்டைலிஷான உளவுத் துறை அதிகாரியாக சால்ட் & பெப்பர் ஹேர்ஸ்டைல் கோர்ட் சூட் உடைகளுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் ஒரு ஆக்ஷன் நாயகனாக விக்ரமின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டும் என்று நம்பலாம்.
மொத்தத்தில் இந்தப் பிறந்த நாளில் விக்ரமின் அரிதான திரைப் பயணத்தையும் அவர் நிகழ்த்திய அசாத்திய சாதனைகளையும் அசைபோட்டுக்கொண்டே அவர் எங்கும் சென்றுவிடவில்லை இங்குதான் இருக்கிறார். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி நம்மை மகிழ்விப்பார் என்பதையும் நினைத்து மகிழ்ச்சியடைவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago