மனம் மிகவும் வலிக்கிறது - மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு அனுபம் கேர் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதிக்குச் சென்ற மருத்துவப் பணியாளர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வேறு இடத்தில் தனிமைப்படுத்துவதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அப்பகுதி மக்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சுகாதாரப் பணியாளர்களுடன் சென்றிருந்த போலீஸாரையும் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

மருத்துவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சில மக்கள் மருத்துவர்களை தாக்குவதை பார்த்தபின் எனக்கு சோகமும் அதே நேரத்தில் கடும் கோபமும் ஏற்படுகிறது. நமது உயிரை காப்பவர்களின் உயிருக்கு நாம் எப்படி அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம்?.

மொரதாபாத் மருத்துவர்களின் முகம் முழுவதும் ரத்தமாக இருப்பதை பார்க்கும்போது மனம் மிகவும் வலிக்கிறது. இந்த விவகாரம் குறித்து சிலர் வாய்மூடி மவுனமாக இருப்பது அதைவிட அதிக வலியை தருகிறது.

இவ்வாறு அனுபம் கேர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 23 பேர் பலியாகியுள்ளார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE