அளவில்லா அன்பு; அதீத மரியாதை: தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டிய மகேஷ் பாபு

By செய்திப்பிரிவு

ஓய்வின்றித் தொடர்ந்து பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு.

இந்தியா முழுக்கவே காரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

ஆனால் , மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோர் தொடர்ச்சியாக ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். அதிலும் தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக மருந்து தெளிப்பது, குப்பையைச் சுத்தம் செய்வது என்று பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுடைய பணிக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சுற்றுப்புறங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா என்று உறுதி செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்தச் செய்தி. நாம் நம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்போது அவர்கள் தினமும் வெளியே வந்து நாம் ஆபத்தில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்தக் கொடிய வைரஸுக்கு எதிரான இந்தப் போர் முன்வரிசைப் பணியாளர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஆசிகளும், அளவில்லா அன்பும், அதீத மரியாதையும், இதயம் கனிந்த நன்றியும்".

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE