தொடர் சர்ச்சைப் பதிவுகள்: கங்கணா சகோதரியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

By செய்திப்பிரிவு

ட்விட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருபவர் பாலிவுட் நடிகை கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல்.

கங்கணா, ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள். சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர் கங்கணா. அதைவிட அதிக சர்ச்சைக் கருத்துகளையும், தானாகச் சென்று சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் சண்டை போடுவதிலும் பிரபலமானவர் ரங்கோலி. ட்வீட், பேட்டி என எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பவர்.

சமீபத்தில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை பிரபல நாளிதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டபோது, அதில் கங்கணாவின் பெயர் இல்லை என்பதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, ரங்கோலி சாண்டெல் பரபரப்பைக் கிளப்பினார்.

தன் சகோதரி கங்கணாவைத் தவிர மற்ற யாரும் நடிகைகளே இல்லை என்ற ரீதியிலான கருத்துகளைப் பதிவிடுவார். சமீபத்தில் நடிகை டாப்ஸியை ‘பி கிரேட்’ நடிகை என விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல் இல்லாமல் மீண்டும் நேரடியாக பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என்று கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கிப் பதிவிட்டதாக ரங்கோலியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. பலரும் அளித்த புகாரின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரங்கோலியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுக்கு பாலிவுட் பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரபல பாலிவுட் ஆபரண வடிவமைப்பாளர் ஃபாரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''இந்தக் கணக்கை முடக்கியதற்கு ட்விட்டர் நிர்வாகத்துக்கு மிகவும் நன்றி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர் தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் எனவும் கூறி, தன்னை ஹிட்லரின் நாஜிப்படைகளோடு ஒப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இதனால் நான் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தேன்''.

இவ்வாறு ஃபாரா கான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE