கரோனா போராளிகளுக்கான உலகளாவிய நிகழ்வு: ஷாரூக்கான் பங்கேற்பு

By பிடிஐ

ஒவ்வொரு நாளும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றை தடுக்க கடுமையாக போராடி வரும் போராளிகளுக்காக ‘ஒன் வேர்ல்ட்: டூகெதர் அட் ஹோம்’ என்ற ஆன்லைன் நிகழ்வை உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்த்து போராடிவரும் முன்வரிசை போராளிகளுக்கு நம்முடைய ஆதரவு தேவை. அதனால் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று உலக சுகாதார நிறுவனத்துடன் ‘ஒன் வேர்ல்ட்: டூகெதர் அட் ஹோம்’ என்ற சிறப்பு நிகழ்வில் நான் இணையவுள்ளேன்’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் லேடி காகா, பில்லி ஜோ ஆர்ம்ஸ்ட்ராங், க்ரிஸ் மார்ட்டின், டேவிட் பெக்காம், ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பிரியங்கா சோப்ரா, டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி சனிக்கிழமை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், அமேசான் ப்ரைம், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஒளிபரப்பாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE