'மஸக்கலி' ரீமிக்ஸ் சர்ச்சை: முதல் முறையாக மனம் திறந்த சித்தார்த் மல்ஹோத்ரா

By செய்திப்பிரிவு

'மஸக்கலி' ரீமிக்ஸ் சர்ச்சை தொடர்பாக 'மர்ஜாவன்' நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

2009-ம் ஆண்டு வெளியான 'டெல்லி 6' படத்தில் 'மஸக்கலி' என்ற பாடல் மிகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசை உரிமை டி-சீரியஸ் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது 'மர்ஜாவன்' படத்துக்காக 'மஸக்கலி' பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தினர்.

அந்தப் பாடலின் வீடியோ ஏப்ரல் 8-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. கடும் எதிர்வினைகளைச் சந்தித்த இந்தப் பாடலை 'டெல்லி 6' படக்குழுவினர் அனைவருமே கடுமையாகச் சாடினார்கள். மேலும், ஏ.ஆர்.ரஹ்மானும் நேரடியாக இல்லாமல், மறைமுகமாகச் சாடியிருந்தார். இந்தப் பாடலை பல்வேறு மாநிலப் போலீஸாரும் கரோனா விழிப்புணர்வு விளம்பரத்தில் பயன்படுத்தினார்.

இந்தச் சர்ச்சைகள் குறித்து 'மர்ஜாவன்' படக்குழுவினர் அமைதியாகவே இருந்து வந்தனர். முதல் முறையாக சித்தார்த் மல்ஹோத்ரா 'மஸக்கலி' சர்ச்சைத் தொடர்பாக பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'மர்ஜாவன்' படத்தின் விளம்பரப் பாடலாகத்தான் அப்போது எடுக்கப்பட்டது. நான் இதற்கு முன்னரே ரீமிக்ஸ் பாடல்களில் நடித்திருக்கிறேன். அதை நான் ஆதரிக்கிறேனா இல்லையா, அவை நல்லதா, கெட்டதா என்பது பற்றியெல்லாம் பேச்சு இல்லை. படத்துக்குத் தேவை, நடிக்க வேண்டும் என்று சொன்னால் நடிக்க வேண்டும். அதில் சில பாடல்கள் பெரிய வெற்றியும் பெற்றிருக்கின்றன.

நான் நடித்த ஒரு படத்தை யாராவது ரீமேக் செய்து, அது சரியாக எடுக்கப்படவில்லை என்றால் அது கண்டிப்பாக எனக்கு எரிச்சலைத் தரும். எனவே 'மஸக்கலி' பாடல் பிடிக்காதவர்களின் உணர்வுகள் எனக்குப் புரிகின்றன.

ஆனால், இந்த ரீமீக்ஸ் கலாச்சாரம் மெதுவாக மறைந்து வருகிறது என நினைக்கிறேன். பழைய விஷயத்தை மீண்டும் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. புதிதாக எதுவும் இல்லை என்றால் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு ரசிகனாக நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். ஒரு நடிகனாகவும், புதிய பாடல் என்றால், ஆஹா அழகான வரிகள், மெட்டு என எனக்கு சுவாரசியமாக இருக்கும்.

நான் இன்னமும் பழைய கிஷோர் குமார் பாடல்களைக் கேட்டு வருகிறேன். கேட்கக் கேட்க அந்த வரிகளின் அழகு, ஆழம் எனக்கு அதிகம் பிடிக்கிறது. நாம் மீண்டும் அந்தப் பாணிக்குத் திரும்புவோம் என நம்புகிறேன்"

இவ்வாறு சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE