தொடர்ச்சியாக தன்னிடம் எழுப்பப்படும் கேள்வி: பி.சி.ஸ்ரீராம் சாடல்

தொடர்ச்சியாக தன்னிடம் எழுப்பப்படும் கேள்வி தொடர்பாக பி.சி.ஸ்ரீராம் விளக்கமளித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம். இப்போதும் இவருடைய ஒளிப்பதிவுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. நேற்று (ஏப்ரல் 14) இவர் ஒளிப்பதிவு செய்த 'அலைபாயுதே' வெளியான நாளாகும். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இது தவிர்த்து 'அபூர்வ சகோதரர்கள்', 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்', 'குருதிப்புனல்', 'குஷி' உள்ளிட்டவை இவர் ஒளிப்பதிவு செய்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை. இந்தப் படங்களின் சில காட்சிகளை எப்படி ஒளிப்பதிவு செய்தீர்கள் என்று பலரும் இவரிடம் கேட்டு வருவார்கள்.

அதிலும் குறிப்பாக கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ளமாக கமல் நடித்த காட்சிகளை எப்படி ஒளிப்பதிவு செய்தார் என்ற ரகசியத்தை இப்போது வரை படக்குழு தெரிவிக்கவே இல்லை.

தன்னிடம் தொடர்ச்சியாக எப்படி ஒளிப்பதிவு எப்படி செய்தீர்கள் என்று கேட்கப்பட்டு வருவது குறித்து பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய வேலையைப் பற்றிய பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்தின் போதும் ஒவ்வொரு ஷாட்டையும் எடுக்க ஒருவர் தன்னை முழுமையாக எரிக்க வேண்டும். அதனால்தான் ஒரு காட்சியைப் பற்றிக் கூட என்னால் பேச முடிவதில்லை. ஒரு காட்சியை மட்டும் தேர்ந்தெடுத்தால் மற்ற காட்சிகளின் தொடர்பை இழக்க நேரிடும் என்று உணர்கிறேன். ஒரு கதையின் ஆசிரியர் சிறப்பாகச் செயல்பட்டால் அவரது துணை ஆசிரியர்களின் பணிகளும் அறியப்படும்".

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE