'மும்பை எக்ஸ்பிரஸ்' நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம்: பசுபதி

By செய்திப்பிரிவு

'மும்பை எக்ஸ்பிரஸ்' ஒரு கச்சிதமான படம். நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம் என்று பசுபதி குறிப்பிட்டுள்ளார்.

சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், பசுபதி, மனிஷா கொய்ராலா, நாசர், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. கமல் தயாரித்த இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவானது.

இந்தப் படம் வெளியான சமயத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், இப்போது இந்தப் படம் தொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று (ஏப்ரல் 14) இந்தப் படம் வெளியான நாளாகும். இந்தப் படம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் பசுபதி. அதில் 'மும்பை எக்ஸ்பிரப்ஸ்' படம் ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு பசுபதி, "அந்த நேரத்தில் அப்படியான நகைச்சுவைக்கு மவுசு இல்லை. இன்று ப்ளாக் காமெடி என்று தனி வகையாகவே அது பார்க்கப்படுகிறது.

நாங்கள் செய்தது ப்ளாக் காமெடியா வைட் காமெடியா என்று எனக்குத் தெரியாது. ரசிகர்களுக்குப் புரியுமா? அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் விமர்சனங்கள் வரும்போது படம் திரையரங்கில் இல்லை. என்னைப் பொறுத்தவரையில், 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஒரு கச்சிதமான படம். நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தின் தோல்வி உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்ததா என்ற கேள்விக்கு பசுபதி, "நான் தோல்வி என்று சொல்ல மாட்டேன். தயாரிப்பாளருக்கு படம் லாபம் சம்பாதித்துத் தராமல் போயிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை படம் வெற்றியே. இன்று நாம் இதைப் பற்றி பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, 'மும்பை எக்ஸ்பிரஸ்' பார்த்ததாகவும், படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்ததாகவும் கூறினார். இன்னொரு நண்பர், ப்ளாக் காமெடி என்ற ட்ரெண்டை தமிழில் முதன்முதலில் ஆரம்பித்தது 'மும்பை எக்ஸ்பிரஸ்' தான் என்று கூறினார். படம் வெளியானபோது இந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் எங்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கும். ஆனால் இன்னமும் இப்படியான பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று பசுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE