பேட்மேன் அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோக்கர்

மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி பேட்மேன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் ஜோக்கர் கதாபாத்திரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வந்த 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படம்தான், பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.

தொடர்ந்து 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' என இரண்டு படங்களுடன் இந்த திரை வரிசையிலிருந்து நோலன் விலகினார். இதற்குப் பின் ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின.

தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ், 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய படங்கள் போல இல்லாமல் முழுக்க முழுக்க காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘தி பேட்மேன்’ படத்தின் அடுத்த பாகங்களில் காமிக்ஸில் இருப்பது போலவே பேட்மேனுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறப்பது போல கதைக்களம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்தில் ஜோக்கர் கதாபாத்திரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் காலின் ஃபெர்ரல், பென்குயின் என்ற வில்லன் கதாபாத்திரத்திலும், பால் டானோ, ரிட்லர் என்ற வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸோ க்ரேவிட்ஸ், கேட்வுமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'தி பேட்மேன்’ ஜூன் 5, 2021 அன்று வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE