அச்சம் என்பது நாம் பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதால் வருவதல்ல. அது ஒரு மனநிலை : காயத்ரி

மனநலம் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினை என்று நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்தியா முழுக்கவே எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், தங்களுடைய பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து அதன் சுவாரசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இது ஒரு பழைய புகைப்படம். அப்போது எனக்கு இந்த புகைப்படத்துக்காக நிற்கும் தன்னம்பிக்கை இல்லை. எனது உடல்வாகு குறித்து நான் அச்சப்படுகிறேன் என்று சொல்லும்போது நிறையப் பேர் நான் ஏதோ பித்துப் பிடித்துப் பேசுவது போல என்னைப் பார்ப்பார்கள். அச்சம் என்பது நாம் பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதால் வருவதல்ல. அது ஒரு மனநிலை.

நமது காலத்தில் மன நலம் என்பதுதான் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினை. ஒருவேளை இதைப் படிக்கும் உங்களுக்கு, உங்களைக் கண்ணாடியில் பார்க்கும்போது, உங்களிடம் எது நன்றாக இல்லை என்ற விஷயங்கள் மட்டுமே தெரிகிறதென்றால், அப்படி உணரும் ஆள் நீங்கள் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது நம் எல்லோருக்கும் நடக்கும். ஆனால் அது அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒவ்வொரு தழும்பும், மச்சமும் உங்கள் பயணத்தில் ஒரு மைல்கல். ஒவ்வொரு கதையும் தனித்துவமானது. அதுதான் உங்களை உருவாக்கியுள்ளது. அதை ஏற்றுக்கொள்ளுங்கள், நேசியுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களை நீங்கள் கொஞ்சம் நேசித்தால் அது நீண்ட நாள் நன்மை தரும். நான் சொல்வதை நம்புங்கள். என் மீது நான் அன்பு செலுத்தவும், எனக்கு உந்துதல் அளிப்பதிலும் முக்கியமானவர்கள் சுரேஷ் மேனன் மற்றும் வினோத் ஆகிய இருவருக்கும் நன்றி"

இவ்வாறு காயத்ரி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE