சிங்கப்பூர் அமைச்சர் வேண்டுகோள்: உடனே வீடியோ வெளியிட்ட ரஜினி

சிங்கப்பூர் அமைச்சரிடம் வந்த வேண்டுகோளை ஏற்று, உடனடியாக வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார் ரஜினி

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாகும்.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து காலையிலேயே ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்காக வீடியோ ஒன்றை மீண்டும் வெளியிட்டார். இது தொடர்பாக விசாரித்த போது, சிங்கப்பூர் அரசாங்கம் இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் யாராவது ஒரு முன்னணி தமிழ் நடிகர் பேசினால் நன்றாக இருக்கும் எனக் கருதியிருக்கிறது.

இதற்காக அவர்களுடைய நலம் விரும்பிகள் மூலம் ரஜினிக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது. உடனே செய்து கொடுக்கிறேன் என்று, வீடியோவில் பேசி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். ரஜினி பேசிய வீடியோவினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:

"என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்த கோவிட் 19 செய்தியைச் சொன்ன பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றிகள், இந்த முக்கியமான செய்தி அவரது தனித்துவமான ஸ்டைலின் மூலம் சொல்லப்பட்டது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE