கரோனா வைரஸ் அச்சம்: வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு ரஜினி வேண்டுகோள்

கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு ரஜினி வீடியோ வடிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாகும்.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து காலையிலேயே ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த கரோனா வைரஸால் உலகமே பாதிப்படைந்துள்ளது. இதில் இந்தியாவோ, தமிழ்நாடே விதிவிலக்கல்ல.

உங்களைப் பிரிந்து வாடும் உங்களுடைய உறவினர்கள், குடும்பத்தினருக்கு சதாநேரமும் உங்களைப் பற்றி தான் சிந்தனை, உங்களைப் பற்றி தான் கவலை. நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டின் அரசு எந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து, உங்களை நீங்கள் பாதித்துக் கொள்ளுங்கள்.

இது தான் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொடுக்கும் இந்தாண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள் இதுவும் கடந்து போகும்"

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE