கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு சீனாவில் முதல் இந்தியப் படமாக வெளியாகும் ‘சூப்பர் 30’

சீனாவின் வூஹான் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தனிமை மருத்துவமனை, வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. திரைப்பட வெளியீடு, விருது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவில் கரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் அங்கு மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘சூப்பர் 30’ படம் சீனாவில் ரிலீஸ் ஆகத் தயாராகி வருகிறது.

இதுகுறித்து ‘சூப்பர் 30’ படத்தைத் தயாரித்துள்ள ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷிபாஷிஷ் சர்கார் கூறியிருப்பதாவது:

''கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு சீனாவில் ரிலீஸ் ஆகவுள்ள முதல் படம் ‘சூப்பர் 30’. நாங்கள் இப்படத்தை சீனாவின் சென்சார் போர்டுக்கு அனுப்பியிருந்தோம். மூன்று கட்டங்களில் முதல் கட்டத்தைத் தாண்டி விட்டோம். அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது சீனாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதனால் சென்சார் சான்றிதழைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால் உடனடியாக சீனாவில் படம் வெளியாகும்''.

இவ்வாறு ஷிபாஷிஷ் சர்கார் கூறியுள்ளார்.

ஹ்ரித்திக் ரோஷன், மிருனல் தாகூர், அமித் சாத், நந்தீஷ் சந்து உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் 30' படத்தை விகாஷ் பால் இயக்கியிருந்தார். ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE