தொடரும் ஷாரூக் கானின் சேவை: சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அளித்தார்

மகாராஷ்டிர சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியதற்காக ஷாரூக் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

கோவிட்-19 தொற்றை எதிர்த்து நாடே போராடிக்கொண்டிருக்கும் வேளையில், களத்திலிருந்து சேவை செய்யும் பணியாளர்களுக்கு உதவ பல்வேறு பிரபலங்கள் முன்வந்துள்ளனர்.

ஏற்கனவே கோவிட்-19 நிவாரணத்துக்காக தன் பங்காகவும், தனது நிறுவனங்களின் பங்காகவும் பல்வேறு வகையான நிதியுதவிகளை நடிகர் ஷாரூக் கான் அறிவித்திருந்தார். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு 25,000 பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உபரகணங்களை அளித்துள்ளார்.

ஆனால், இதுபற்றி அவர் வெளியே சொல்லவில்லை. மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே ஷாரூக் கானுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருப்பதால் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

"25,000 பிபிஇ கிட் அளித்துள்ள உங்களுக்கு மிக்க நன்றி ஷாரூக் கான். கோவிட்-19க்கு எதிரான நம் போராட்டத்திலும், களத்தில் முன்னால் நிற்கும் மருத்துவக் குழுவின் பாதுகாப்புக்கும் இது பெரிய உதவியாக இருக்கும்" என்று ராஜேஷ் டோபே தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் கூறியுள்ள ஷாரூக், "உபகரணங்களை வாங்குவதற்கு வழிவகை செய்த உங்களுக்கு நன்றி. நம்மையும், மனிதத்தையும் காப்பாற்றும் இந்த உயரிய சேவையில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். சேவை செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும், உங்கள் குழுவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19க்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் வேலைகளுக்கு ஷாரூக் கான் தன்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

முன்னதாக, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த மும்பையில் இருக்கும் தனக்குச் சொந்தமான நான்கு மாடி அலுவலகக் கட்டிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சியிடம் கொடுத்திருந்தார் ஷாரூக் கான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE