கேரள காவல்துறையின் ‘நிர்பயம்’ பாடல் வீடியோ- கமல்ஹாசன் பாராட்டு

By பிடிஐ

கேரள காவல்துறையின் ‘நிர்பயம்’ பாடலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக பாடல் ஒன்றை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.

‘நிர்பயம்’ என்ற தலைப்பிட்ட இப்பாடலை கொச்சி மெட்ரோ நிலையத்தை சேர்ந்த காவலர் ஆனந்தலால் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘நிர்பயம்’ பாடலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

அற்புதம். முன்வரிசை போராளிகளான மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை காவல்துறையின் இந்தப் பாடல் மூலம் உற்சாகப்படுத்துவது அவசியம்.

சீருடையில் இருக்கும் ஒரு காவலர் இந்தப் பாடலை பாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு யோசனையை முன்னெடுத்தமைக்காக காவல்துறை உயரதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தலைவணங்குகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பாராட்டுக்கு கேரள காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா கூறியிருப்பதாவது:

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனிடமிருந்து இந்த பாராட்டுச் செய்தியைப் பெறுவது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இது போன்ற கடினமான சூழலில் இந்த செய்தி காவல்துறையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்.

உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு கேரள அரசு மற்றும் காவல்துறை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குடிமக்களுக்கும், இந்த உயர்ந்த நாட்டுக்கும் எங்களது சுயநலமற்ற சேவையை தொடர நிச்சயமாக இது உதவும்.

இவ்வாறு லோக்நாத் பெஹரா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE