மலையாள சினிமா ரசிகர்களுக்காக புதிய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம்

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் போல மலையாள சினிமா ரசிகர்களுக்காக ‘நீஸ்ட்ரீம்’ என்ற தளம் புதிதாக அறிமுகமாகியுள்ளது.

திரையரங்குகளுக்காக படங்கள் எடுத்த காலம் போய் தற்போது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்காக படங்கள் மற்றும் வெப்சீரிஸ் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் இத்தளங்களுக்குப் பார்வையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் முழுக்க முழுக்க மலையாள சினிமா ரசிகர்களுக்காக ‘நீஸ்ட்ரீம்’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மலையாளப் படங்கள், செய்தி சேனல்கள், வெப்சீரிஸ் உள்ளிட்டவை இலவசமாக இடம்பெற்றுள்ளன.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே ஒளிபரப்பாகும் ‘நீஸ்ட்ரீம்’ தளம் விரைவில் உலகம் முழுவதும் செயல்படும்.

இதுகுறித்து ‘நீஸ்ட்ரீம்’ தலைமை அதிகாரி ஆசிஃப் இஸ்மாயில் கூறியுள்ளதாவது:

'' ‘நீஸ்ட்ரீம் தளம் மூலம் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் நோக்கம். தரமான உள்ளடக்கங்களின் மூலம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். கேரளா மற்றும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மக்களிடையே உள்ள சிறந்த படைப்பாளிகளையும், அதீத திறமைசாலிகளையும் ‘நீஸ்ட்ரீம்’ கண்டறியும்''.

இவ்வாறு ஆசிஃப் இஸ்மாயில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE