கரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்காக எஸ்.பி.பி, யேசுதாஸ் பங்கேற்கும் ஆன்லைன் இசை நிகழ்ச்சி

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்காக இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டிலிருந்தே பங்குபெறும் ‘சங்கீத சேது’ என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இந்திய பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு (இஸ்ரா) அறிவித்துள்ளது.

இந்நிகைழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே. யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, ஷங்கர் மஹாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், சோனு நிகம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டில் இருந்தபடியே பாடல்களை பாடவுள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரா தலைமை அதிகாரி சஞ்சய் டாண்டன் கூறுகையில், இந்த சூழலில் நாட்டில் உள்ள முன்னணி பாடகர்களின் மூலம் மக்களை மகிழ்வித்து அவர்களின் அழுத்தம் மற்றும் கவலையை குறைக்க இஸ்ரா முடிவு செய்தது. இந்த தேசிய சேவைக்கு முன்வந்த அனைத்து கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

‘சங்கீத சேது’ நிகழ்ச்சி ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று தினங்களும் இரவு 8 மணிக்கு நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE