ஈகோவைக் கைவிடுங்கள் என்று விஷால் - ஐசரி கணேஷ் ஆகிய அணிகளுக்கு சச்சு, லதா, மனோபாலா ஆகியோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனால், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள், தினசரித் தொழிலாளர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு திரையுலகங்கள் களமிறங்கியுள்ளன. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அலுவலர், நடிகர்களுக்கு உதவ நிதியளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தபோதுகூட, பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி வழங்கவே இல்லை. காரணம், அங்கு இரண்டு அணிகளாக நிற்பதுதான்.
விஷால் அணியும், ஐசரி கணேஷ் அணியும் தனித்தனியாக இருந்துகொண்டு தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்போது கூட நடிகர்களுக்கு உதவ வெறும் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகி இருப்பது பெரும் வேதனைக்குரிய விஷயமாகும்.
இதனிடையே பழம்பெரும் நடிகைகளாக சச்சு, லதா மற்றும் மனோபாலா ஆகியோர் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர்கள் பேசியிருப்பதாவது:
சச்சு: மூத்த கலைஞர்கள் அனைவருக்குமே ஒரு சின்ன ஆதங்கம் இருக்கிறது. நாங்கள் அடிக்கடி ஒன்றாகப் பேசும்போது இதைப் பற்றித்தான் பேசுகிறோம். என்னவென்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது நமது மூத்த நடிகர்கள் அனைவருமே நமக்கென்று ஒரு சங்கம் வேண்டும், உட்கார இடம் வேண்டும் என்று உருவாக்கினார்கள். அதுமட்டுமல்ல, சந்தோஷங்கள், வருத்தங்களை உட்கார்ந்து பேச ஒரு இடம் வேண்டுமென்றால் ஒரு சங்கம் வேண்டும். அதற்காக அவர்களுடைய காலகட்டத்தில் முடிந்த அளவுக்குச் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இப்போது அடுத்தடுத்து வாரிசுகள் வரும்போது நாமும் அதைத் தொடர்ந்து பண்ண வேண்டும். முன்பு மாதிரி நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. மனதில் எவ்வளவோ வருத்தங்கள் இருக்கலாம். அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். நீங்கள் அதெல்லாம் மறந்துவிட்டுத் திருப்பியும், மறுபடியும் எல்லாரும் இணைந்து அந்த இடத்தில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். நீங்கள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
இரண்டாவது இந்த கரோனா என்ற வைரஸ் நம்மை ரொம்ப சிந்திக்க வைத்துள்ளது. கலையுலகைச் சேர்ந்த சக நடிகர்கள் எல்லாம் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களால் வேலை செய்ய முடியவில்லை. ஆனால், நாம்தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து நிதியுதவி பண்ண வேண்டும். நம்ம குடும்பத்துக்கு நம்ம செய்யாமல், வேறு யார் வந்து செய்ய முடியும். அரசாங்கம் நிறைய செய்கிறது. ஆனால், கூட இருக்கும் சக நடிகர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும். இந்தக் கட்டிடத்தையும் உருவாக்கி அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து வாருங்கள்.
லதா: நடிகர் சங்கத்தில் எந்தவொரு அணியிலும் இல்லாத பொது ஆளாகப் பேசுகிறேன். கரோனா வைரஸினால் இந்த உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. இதனால் நாடக நடிகர்கள், சினிமாவை நம்பியிருப்பவர்கள் நிறையப் பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரையும் வேண்டிக் கொள்வது என்னவென்றால், போனது போகட்டும். யார் சரி, யார் தவறு என்றெல்லாம் வேண்டாம். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இருப்போம். அந்தக் காலத்திலிருந்து நடிகர் சங்கம் என்பது தாய் வீடு போன்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதால் அனைவருமே அங்கம் வகித்தார்கள். இப்போது அவர்கள் பிரிந்து போய்விட்டார்கள். நாம் மட்டுமே இருக்கிறோம். வெறும் 3,500 பேர் இருப்போமா?. அவர்களுக்காகக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று அனைவருமே ரொம்பவே உழைத்தார்கள்.
யாரையும் குறை சொல்லவில்லை. தப்பு சொல்லவில்லை. அனைவருமே அவர்களுடைய பங்கைச் சிறப்பாகச் செய்தார்கள். எம்.ஜி. ஆரும் சிவாஜியும் ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்திச் சம்பாதித்து இதை உருவாக்கினார்கள். அதில்தான் சங்கரதாஸ் கலையரங்கம் கட்டப்பட்டது. இதே மாதிரி நிறையக் கடந்து வந்துள்ளோம். இப்போது என்னவாகி விட்டது என்றால் ஒரு ஈகோ. யார் சரி, தவறு என்ற பேச்சுக்கே நான் வரவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் இப்போது எவ்வளவு பெரிய வல்லரசுகளை எல்லாம் முறியடித்துவிட்டது பாருங்கள். உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. மூத்த நடிகர் ஒருவரை வைத்துப் பேசி தீர்த்துக் கொள்வோம். ஈகோவை விடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக முன்பு மாதிரி இருப்போம்.
மனோபாலா: இந்த மாதிரி 144 தடை உத்தரவு வரும் என்று நாம் நினைத்தது கூட கிடையாது. கேள்விப்பட்டு இருப்போம், நிஜத்தில் என்ன என்பதே தெரியாது. அனைவரும் இதைப் பார்க்க வேண்டும் என்று ஆண்டவன் நம்மைத் தள்ளிவிட்டிருக்கிறான். இப்போது கூட மரணம் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எது எப்போது நம்மைத் தாக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்கிறார்கள். என்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அதைப் பேசி சரி செய்து கொள்ளும் மனநிலைக்கு நம்மைக் கொண்டு விட்டிருக்கான் ஆண்டவன்.
இப்போது கூட நம் ஈகோவை எல்லாம் ஒதுக்கிவிட்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக ஒன்றுகூடி மறுபடியும் மீண்டும் இணைந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எனக்குப் பேராசைதான். ஆனால், அது நடக்குமென்று சத்தியமாக எனக்குத் தெரியும். சரோஜா தேவி அம்மா, எம்.என்.ராஜம் அம்மா, விஜயகுமாரி அம்மா, சச்சு அம்மா எல்லாருமே இது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அந்தக் கட்டிடம் கட்டிடமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஷூட்டிங்கிற்கு விட்டுவிடப் போகிறார்கள். தயவுசெய்து ஈகோவை எல்லாம் தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டு, ஒன்றுகூடி உட்கார்ந்து பேசுங்கள். அப்படிச் செய்தால் நல்ல முடிவுக்கு வருவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago