போலி புகைப்படத்தைத் தெரியாமல் பகிர்ந்த அமிதாப்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

கோவிட்-19 தொடர்பாக அமிதாப் பச்சன் பதிவுகளைப் பகிர ஆரம்பித்ததிலிருந்து இணையத்தில் நையாண்டி செய்பவர்களுக்கு வேலை அதிகமாகிவிட்டது. தற்போது, 9 மணிக்கு 9 நிமிடங்கள் இந்தியாவில் எப்படி இருந்தது என்ற போலியான செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்து சிக்கியுள்ளார் அமிதாப்.

ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரதமர் மோடி, இரவு 9 மணிக்கு வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள், மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி ஏற்றி நம் தேசத்தின் ஒற்றுமையைக் காட்டச் சொன்னார். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இதைப் பின்பற்றினர். அந்த நேரத்தில் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஒன்றை யாரோ பகிர அமிதாப் அதை ரீட்வீட் செய்து, "பாரு உலகமே, நாங்கள் எல்லோரும் ஒன்று" என்று குறிப்பிட்டிருந்தார்.

அமிதாப்பின் ட்வீட் வைரலான அடுத்த நொடியே, போலியான வாட்ஸ் அப் ஃபார்வர்டை பகிர்ந்தாதா அவரை நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

''அவரது கையிலிருந்து மொபைலை வாங்கிவிடுங்கள்'' என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், ''வாட்ஸ் அப் வந்து பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்து அவர்கள் முட்டாள்தனத்தைக் காட்டிவிட்டது'' என்று பதிவிட்டிருந்தார்.

இன்னும் சிலர் வாட்ஸ் அப்பை நீக்கிவிடுங்கள். இதுபோன்ற வாட்ஸ் அப் குழுவிலிருந்து வெளியே வாருங்கள் என்றெல்லாம் தொடர்ந்து அவரை வறுத்தெடுத்தனர். ஏற்கெனவே கோவிட் 19 ஈக்களால் பரவும் என்ற பதிவைப் பகிர்ந்ததால் அவரைப் பலரும் கிண்டல் செய்திருந்தனர்.

மேலும், கைதட்டுதல், சங்கு ஊதுவது ஆகியவை கரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் என்று ஒரு நாள் ஊரடங்கின் போது அவர் சொன்னதும் பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE