தயவுசெய்து பொறுப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருங்கள்: லாரன்ஸ் வேண்டுகோள்

தயவுசெய்து பொறுப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருங்கள் என்று நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்புகள் எதுவுமே நடக்கவில்லை என்பதால், பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதனிடையே பலரும் கரோனா தொற்றுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டார்கள். இதனிடையே கரோனா தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”நண்பர்களே, ரசிகர்களே.. கரோனா வைரஸ் பற்றி நான் கடைசியாக வீடியோ போடும்போது எண்ணிக்கை 10 மட்டுமே இருந்தது. ஆனால் ஒரே வாரத்தில் தமிழகத்தில் 500-ஐத் தாண்டிவிட்டது. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

வெளியே சென்று ஏதாவது வாங்க வேண்டுமென்றால் தயவுசெய்து சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸை எதிர்த்துச் சண்டையிட வேண்டும். தயவுசெய்து பொறுப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் இருங்கள். இது அறிவுரை அல்ல, பணிவான வேண்டுகோள்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE