'வொண்டர் வுமன்' மூன்றாவது பாகம் எடுக்க விரும்பும் இயக்குநர்

By ஐஏஎன்எஸ்

'வொண்டர் வுமன்' முதல் இரண்டு பாகங்களின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ், மூன்றாவது பாகமும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மார்வல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வைத்துத் தனி வரிசைப் படங்கள் உருவாவதைப் போல டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்தும் வார்னர் ப்ரதர்ஸ் படங்கள் எடுத்து வருகிறது. இதில் 'வொண்டர் வுமன்' திரைப்படம் தான் முதல் முழுமையான வெற்றியை அவர்களுக்குத் தேடித் தந்தது. இந்த நாயகி கால் கடாட், இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் இருவரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றனர்.

இதன் பிறகே தொடர்ந்து 'ஆக்வா மேன்', 'ஷஸாம்' உள்ளிட்ட படங்கள் டிசி வரிசையில் வெற்றி பெற்றன. தற்போது 'வொண்டர் வுமன் 1984' (இரண்டாம் பாகம்) வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் இந்தப் படம் குறித்து பேட்டி ஜென்கின்ஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மூன்றாம் பாகம் வருமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அந்தக் கதாபாத்திரத்துக்காக தன்னிடம் நிறைய திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

"'வொண்டர் வுமன் 3' படத்தை நினைத்தால் ஆர்வமாக உள்ளது. இப்போது கண்டிப்பாக அதைப் பற்றி நான் நினைக்க வேண்டாம் என்று முயல்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான நேரமென்று உள்ளது. ஆனால் கண்டிப்பாக சில விஷயங்களை நான் இன்னமும் ‘வொண்டர் வுமன்’ கதையில் சொல்லவில்லை. அதைச் செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான போராட்டம் உள்ளது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும். ‘வொண்டர் வுமன்’ பலரை ஆச்சரியப்படுத்தியது. எனவே பலரும் அடுத்த பாகத்தில் தோல்வியடைவோம் என்று காத்திருப்பார்கள். அதனால் இரண்டாவது பாகம் இயக்குவதில் பெரிய வித்தியாசம் இல்லை. முதல் படம் எடுக்கும்போதே, 'வொண்டர் வுமானா, அய்யோ உங்களால் முடியாது' என்றார்கள்.

இதைப் போன்ற படங்கள் தோல்வியடைந்த வரலாறு உண்டு. எனவே, அப்படி புதிதாக ஒரு படத்தை உயிர்ப்புடன், சுவாரசியமான படமாகக் கொண்டு வரும் அழுத்தம் என் மீது இருந்தது. நான் கவனம் செலுத்தியது ஒன்றின் மீது மட்டுமே. 'எனக்கு வொண்டர் வுமன் கதாபாத்திரமும், இந்த வகைப் படங்களும் பிடிக்கும். எனவே நான் ஒரு நல்ல படத்தை எடுக்க முயல்கிறேன்' என்று நினைத்துக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

ஜூன் 5-ம் தேதி வெளியாகவிருந்த ‘வொண்டர் வுமன்’ தற்போதுள்ள கரோனா தொற்று கட்டுப்பாடால் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE