தொலைக்காட்சி நிறுவனங்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், இந்தியா முழுக்கவே எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மக்கள் வீட்டிலேயே இருப்பதால் முன்னணித் தொலைக்காட்சியில் ஹிட்டான படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் பலரும் கணக்குகள் தொடங்கி புதிய படங்கள் பார்த்து வருகிறார்கள்.
தற்போது முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
» கரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் நாட்டின் நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?- காஜல் அகர்வால் யோசனை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பாக அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள்.
தற்போது உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் கரோனா வைரஸ் தாக்குதலால், அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிறையத் திரைப்படங்கள் வெளியிட முடியாமலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த திரைப்படங்கள் நிறுத்தப்பட்டு, எப்போது இயல்புநிலை திரும்புமோ என்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அந்த வாரம் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படங்கள் அப்படியே நிறுத்துப்பட்டு மிகவும் பொருளாதார நெருக்கடியில் தமிழ்த் திரையுலகம் சிக்கித் தவிக்கிறது.
இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்களுக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தோள்கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில், பழைய சீரியல்களை மறுஒளிபரப்புவதும், அதுபோல் ஏற்கெனவே திரையிடப்பட்ட திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஏற்கெனவே திரையிடப்பட்ட நிறையத் திரைப்படங்களின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது. அந்தப் படங்களை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் ஒரு கன்டென்ட் கிடைக்கும். தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடியும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
அதுபோல் நிறைய திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமைகள் விற்கப்படாமல் இருக்கிறது. அவற்றையும் டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. வெளியீட்டுக்குத் தயாரான திரைப்படங்கள் இந்த சூழ்நிலையில் வெளியிட முடியாமல் இருக்கின்றன. எப்போது இயல்பு நிலை திரும்பும், இனிமேல் திரைப்படங்களை எப்போது ரிலீஸ் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் சிறிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரியான திரைப்படங்களை நேரடியாக எக்ஸ்குளூசிவாக சேட்டிலைட்டிலேயோ அல்லது டிஜிட்டல் பிளாட் பார்ம் மூலமாகவோ ரிலீஸ் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன. அதற்கும் நீங்கள் வழிவகை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
பொதுவாகத் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கம் அதிகம். தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்குத் திரைப்படங்கள், பாடல்கள், காமெடி காட்சிகள் எனத் தமிழ்த் திரைத்துறை தயாரிப்பாளர்களின் கன்டென்ட் எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் திரைப்படங்களை சேட்டிலைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமங்களை வாங்கி உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago