எங்களிடம் கருணை காட்டு கரோனா; போய்விடு: விக்னேஷ் சிவன்

எங்களிடம் கருணை காட்டு கரோனா; போய்விடு என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை நேற்றைய (ஏப்ரல் 5) நிலவரப்படி 571 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மேலும், ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் போது ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று நேற்று (ஏப்ரல் 5) சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றி வைத்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நயன்தாராவும் தனது வீட்டின் பால்கனியில் கையில் விளக்கு ஏந்தி நின்றார்.

இதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்தப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த கரோனா, எங்கள் பிரார்த்தனைகளின்போது கடவுளுக்காகத்தான் இதைச் செய்வோம். இப்போது உனக்காகச் செய்கிறோம். நீ மீண்டும் எங்களை சகஜ நிலைக்குத் திரும்ப விடவேண்டும் என்று கோருகிறோம், பிரார்த்திக்கிறோம்.

எங்களிடம் கருணை காட்டு கரோனா. போய்விடு. விஞ்ஞான ரீதியாகப் பேச வேண்டுமென்றால், நிறைய வெளிச்சம், நெருப்போடு வெப்பம் சில டிகிரி அதிகமாகியிருக்கும். இதனால் வெற்றிகரமாக கரோனா கிருமி குடும்பத்தைச் சேர்ந்த சில கிருமிகளை நாம் கொன்றிருப்போம். இது உண்மையா?".

இவ்வாறு விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE