நாங்கள் அச்சத்தில் இருப்பதை தைரியமாக ஒப்புக்கொள்கிறோம்: சல்மான் கான் வீடியோ பதிவு

தான் அச்சத்தில் இருப்பதாகக் கூறியுள்ள சல்மான் கான், தனது குடும்பத்தை மூன்று வாரங்களாகச் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கரோனா அச்சத்தால் இந்தியத் திரையுலகில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. அனைத்து திரையுலகப் பிரபலங்களுமே வீட்டில் இருக்கிறார்கள். தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் கரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

தனது இளைய சகோதரரின் மகன் நிர்வானுடன் ஒரு வீடியோ பதிவை சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இதில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். தன்னுடன் இருக்கும் நிர்வானை அறிமுகப்படுத்திய சல்மான், "நாங்கள் இங்கு சில நாட்கள் இருக்கலாம் என்று வந்தோம். ஆனால் இப்போது இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோம், பயத்தில் இருக்கிறோம். நான் எனது அப்பாவைப் பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. நாங்கள் இங்கிருக்க என் அப்பா வீட்டில் தனியாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

நிர்வானிடம் உன் அப்பாவை நீ சந்தித்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று கேட்க, அவர் மூன்று வாரங்கள் என்று பதில் சொல்கிறார். மேலும். நிர்வானிடம், "உனக்கு இந்த திரைப்பட வசனம் நினைவிருக்கிறதா. 'பயந்த ஒருவன்தான் இறந்து போனான்'. அது இந்த தருணத்துக்குப் பொருந்தாது. நாங்கள் பயத்தில் இருக்கிறோம். அதைத் தைரியமாக ஒப்புக்கொள்கிறோம். நீங்கள் இந்த தருணத்தில் துணிச்சலைக் காட்டாதீர்கள். அச்சப்பட்டவன் தான் தானும் தப்பித்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றியுள்ளான். கதையின் நீதி, நாங்கள் அனைவரும் அச்சப்படுகிறோம்" என்று கூறி முடித்துள்ளார்.

முன்னதாக, அரசாங்கத்தின் அறிவுரைகளைக் கேட்கும்படியும், தனிமையில் இருப்பதைக் கடைப்பிடிக்கும்படியும் சல்மான் கான் ஏற்கெனவே ஒரு வீடியோவை தன் ரசிகர்களுக்காகப் பகிர்ந்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE