தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ இணையும் திரைத்துறைக் கூட்டமைப்புகள்

By ஏஎன்ஐ

திரைத்துறையைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து, துறை முடங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி பணியாளர்களுக்கு உதவிட முன்வந்துள்ளன.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திரைத்துறையைப் பொறுத்த வரை படப்பிடிப்புகள் உட்பட அனைத்து விதமான தயாரிப்பு வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்ட், இந்தியத் திரை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் மேற்கிந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும் கை கோர்த்துள்ளன. இதற்காக ஒரு நிவாரண நிதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"மேற்கிந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்ட் மற்றும் இந்தியத் திரை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டும் இணைந்து, இந்த முடக்கத்தால் துறையில் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி பணியாளர்களுக்கு நிதி உதவி அளிக்கவுள்ளது" என்ற அதிகாரப்பூர்வ செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சேரும் நிதி பற்றிய தகவல்கள் மற்றும் நிதி விநியோகம் ஆகியவை வெளிப்படையாகவும், சீராகவும் இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE