கரோனாவை வைத்து ட்விட்டரில் விளையாடிய ராம் கோபால் வர்மா

By செய்திப்பிரிவு

தனக்குக் கரோனா இருக்கிறது என்று பதிவிட்டு தன்னை ட்விட்டரில் பின் தொடர்பவர்களிடம் விளையாடியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்தாலும் தனது சர்ச்சையான கருத்துகள், பதிவுகள் மூலம் எப்படியாவது வெளிச்சத்திலேயே இருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. கரோனா தொற்றினால் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் தொடர்ந்து நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகிறார். கரோனா குறித்த ஒரு பாடலை வேறு புதன்கிழமை அன்று வெளியிட்டிருக்கிறார்.

திடீரென, ''எனக்கு கரோனா இருக்கிறதென்று எனது மருத்துவர் சொல்லியிருக்கிறார்'' என்று பதிவிட்டார் வர்மா. இதைச் சிலர் நகைச்சுவையாகும், சிலர் நிஜமென்றும் நம்பி அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து, ''உங்களுக்கு ஏமாற்றம் தருவதற்கு மன்னிக்கவும். அது முட்டாள்கள் தின நகைச்சுவை என்று என் மருத்துவர் சொல்லிவிட்டார். எனவே இது அவரது தவறுதான் என்னுடையது இல்லை'' என்று இன்னொரு பதிவைப் பகிர்ந்தார் வர்மா.

இதற்கு எப்போதும் போலச் சிலர் சிரித்தும், சிலர் அவரை விமர்சித்தும் பதில் பதிவிட, சில நிமிடங்களிலேயே, ''கடுமையான ஒரு சூழலைச் சற்று இலகுவாக்குவோம் என்றுதான் அப்படிச் சொன்னேன், அந்த நையாண்டி என் மீதுதான். யாரையும் நான் புண்படுத்தும் நோக்கத்தில் போடவில்லை.அப்படிப் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று இன்னொரு பதிவைப் பகிர்ந்து தன்னை வசைபாடிக்கொண்டிருந்தவர்களை அமைதியாக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE