காவல்துறையினர், மருத்துவர்களுக்கு பாரதிராஜா உதவி: தமிழக அரசுக்கும் பாராட்டு

By செய்திப்பிரிவு

கரோனா சமயத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு பாரதிராஜா முகக் கவசங்கள் வழங்கியுள்ளார். மேலும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும்தான் வெளியே வருகிறார்கள்.

மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், காவல்துறையினருக்கு திரையுலகப் பிரபலங்கள் தொடங்கி பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிலர் அவர்களுக்கான முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கி வருகிறார்கள். தற்போது பாரதிராஜாவும் அவர்களுக்கு உதவிகள் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்தக் கொடிய நோயின் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை. நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்" என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE