கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்த ஜஸ்டின் பீபர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துள்ளார் பாடகர் ஜஸ்டின் பீபர்.

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸின் கோரப் பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.15 லட்சமாகவும், பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறவிருந்த தனது அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டீன் பீபர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''தற்போது உலகம் முழுவதும் நிலவி வரும் அச்சுறுத்தல் காரணமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் ஜஸ்டின் பீபர் ஒத்திவைத்துள்ளார். ஜஸ்டின் மற்றும் அவரது இசைக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சிகளுக்காக கடினமாக உழைத்து வந்தனர்.

ஜஸ்டின் எப்போதும் தனது ரசிகர்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருபவர். அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழலில் நிகழ்ச்சிகளை நடத்த அவர் ஆவலோடு காத்திருக்கிறார். அதே டிக்கெட்டுகளை மீண்டும் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE