‘முட்டாள்களே... வீட்டுக்குள் அமர்ந்து டிவி பாருங்கள்’- பிரபல நடிகர் சாடல் 

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸின் கோரப் பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.15 லட்சமாகவும், பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுபவர்களை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் லாரி டேவிட் வீடியோ ஒன்றில் எச்சரித்துள்ளார். இந்த வீடியோவை கலிஃபோர்னியா ஆளுநர் அலுவலகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் லாரி டேவிட் பேசியுள்ளதாவது:

''வெளியே இருக்கும் முட்டாள்களிடம் பேச விரும்புகிறேன். நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது நல்லதல்ல. என்னைப் போன்ற முதியவர்களை நீங்கள் கஷ்டப்படுத்துகிறீர்கள். இல்லை என்னைப் போல இல்லை. ஏனென்றால் எனக்கு உங்களிடம் எதுவும் இல்லை. நான் உங்களைப் பார்க்கவே போவதில்லை.

இது ஒரு அற்புதமான வாய்ப்பு. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. எனவே வீட்டில் இருங்கள். உங்கள் சோபாவில் அமர்ந்து ஜாலியாக டிவி பாருங்கள். யாரையும் சந்திக்காதீர்கள். வீட்டில் தண்ணீர் குழாய் பிரச்சினை போன்ற முக்கியப் பிரச்சினை என்றால் ப்ளம்பரை அழையுங்கள். அவர் சென்றதும் வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்யுங்கள்''.

இவ்வாறு லாரி டேவிட் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE