இந்தத் தருணத்தில் படத்தின் லுக்கை வெளியிட்டது ஏன்? - ராஜமௌலி பதில்

By செய்திப்பிரிவு

இந்தத் தருணத்தில் படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டது ஏன் என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமௌலி பதிலளித்துள்ளார்.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தில் அவரது லுக்கும் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. முதன்முறையாக இந்தப் படம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார் ராஜமௌலி. அதில் அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்வதற்கு இது சரியான தருணம்தானா என்று நீங்கள் மிகவும் யோசித்ததாகக் கூறினார்களே" என்ற கேள்விக்கு ராஜமௌலி, "நிச்சயமாக, ஏனென்றால் நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் இதை வெளியிடலாமா என்று நிறைய ஆலோசித்தோம். ஒட்டுமொத்த மக்களின் கவனமும் வேறு ஒன்றின் மீது இருந்தது. எனவே இதுபோன்ற நேரத்தில் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்வது மக்களுக்குச் சிறிது பொழுதுபோக்காக இருக்கும்.

மக்கள் அதிகம் பேசும் விஷயமாகவும் இருக்கும் என்று நினைத்தோம். ஏனென்றால் சமூக வலைதளங்களில் வரும் 10 செய்திகளில் 8 செய்திகள் போலியாக இருக்கின்றன. அவை மக்களுக்குப் பீதியை ஏற்படுத்துகின்றன. எனவே இதுபோன்ற அதிக அழுத்தம் கொண்ட ஒரு தருணத்தில் நாம் செய்வது மக்களுக்கு ஒரு சிறிய திசைதிருப்பலாக இருக்கும் என்பதாலேயே அதை மகிழ்ச்சியுடன் ரிலீஸ் செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போஸ்டருக்கும் வீடியோவுக்கும் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து ராஜமௌலி, "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்கிறார்கள் எனில் ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஆனால் அதையும் தாண்டி பொதுவான ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம். அவர்கள் மீதுதான் நாம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அவர்களைத் திருப்திப்படுத்துவது மிகவும் கடினம். இந்த மோஷன் போஸ்டரை பொதுவான ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார் ராஜமௌலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE