தொடர் நடவடிக்கைகளால் நாட்கள் நகர்கின்றன- உதயநிதி ஸ்டாலின் நேர்க்காணல்

By கா.இசக்கி முத்து

கரோனா முன்னெச்சரிக்கை யால் அனைத்து படப்பிடிப்பு களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அவர்களுடைய பொழுதுபோக்கு என்னவாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு உரையாடியதில் இருந்து...

சினிமா மற்றும் அரசியல் என தொடர்ந்து சுறுசுறுப்பான நட வடிக்கைகளில் இருப்பவர் நீங்கள். இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் எப்படி பொழுதை கழிக்கிறீர்கள்?

சில தொடர் நடவடிக்கை களில் ஈடுபடுவதில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தினசரி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் உதவிகள் செய்து வருகிறோம். திமுக இளைஞரணி அறிவித்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் தேவையை விசாரித்து, உடனடியாக நிறைவேற்றி வருகிறோம். இதற்காக மாவட்ட அமைப்பாளர்களிடம் தொடர்ந்து அலைபேசியில் பேச வேண்டியிருக்கிறது. நேற்றைக்கு முந்தையநாள் 35 பேரிடம் பேச வேண்டியிருந்தது. நேற்று 30 பேரிடம் பேசினேன். என்ன தேவைகள் இருக்கிறது? என்ன செய்ய வேண்டியுள்ளது என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்படித்தான் இப்போதைய நாட்கள் கழிந்துகொண்டிருக்கின்றன.

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதில்லையா..?

இடையில் அவர்களுக்கும் நேரம் ஒதுக்கி விளையாடுகிறேன். கொஞ்சம் நேரம் விளையாடுவார்கள். பின்பு ஐ-பேட்,நெட்பிளிக்ஸ் என தனியாக விளையாடத் தொடங்கிவிடுவார் கள். முக்கியமாக என் மகளுக்கு தமிழ் வீட்டுப்பாடம் நிறையகொடுத்துள்ளார்கள். அதற்குஉதவி செய்வேன். மனைவி கிருத்திகா படம் இயக்குவதற்காக 2 கதைகளை உட்கார்ந்து தீவிரமாக தயார் செய்து கொண்டிருக்கிறார். அதற்கான வேலைகளில் அவர் தனித்து சுறுசுறுப்பாக இருப்பதால், இப்போது குழந்தைகளின் கண்காணிப்பாளர் நான்தான். இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

படங்கள் ஏதேனும் பார்த்தீர்களா..?

நிறையப் படங்கள் பார்க்காமலேயே தேங்கியிருந்தன. அவை அனைத்தையும் பார்த்து முடித்துவிட்டு இப்போது நெட்பிளிக்ஸில் வெப்சீரிஸ் பார்க்கத் தொடங்கியுள்ளேன். ‘தி ஃபேமிலிமேன்’ பார்த்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. ‘தி டெஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் பார்த்து முடித்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். அதேபோல் ‘அய்யப்பனும் கோஷியும்’மலையாளப் படம் பார்த்தேன். பிருத்விராஜும், பிஜு மேனனும்போட்டிப் போட்டு நடித்திருந்தார்கள். அற்புதமான படம்.

அதேபோல், அடுத்து மகிழ் திருமேனி சார் படத்தில் நடிக்கவுள்ளேன். அதற்கான ஆயத்த வேலைகளை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நேரம் அப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டியது, கரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளோம்.

என்ன புத்தகம் படித்தீர்கள்?

கடந்த 4 மாதங்களாக நிறையப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியுள்ளேன். படிப்பதற்காக வைரமுத்து சார் அவருடைய புத்தகங்களை அனுப்பிவைத்தார். அதில் ‘தண்ணீர் தேசம்’ புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டேன். ரொம்ப அற்புதமான படைப்பு. அடுத்து இரண்டு புத்தகங்களை எடுத்து வைத்துள்ளேன். அதையும் படித்து முடிக்க திட்ட மிட்டுள்ளேன்.

வீட்டில் வேலையாட்களுடன் எல்லாம் பேசுவது உண்டா?

இங்கேயே இருந்து வேலைசெய்பவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். சில முக்கியமானவர்களுக்கு மட்டும் பாஸ் வாங்கி கொடுத்துள்ளோம். ஏதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் வெளியே போய்விட்டு உடனடியாக வந்துவிடுவார்கள். வீட்டிலிருக்கும் காவல்துறையினர் கூட மாஸ்க் அணிந்துதான் இருக்கிறார்கள். 3 உதவியாளர்களில் இரண்டு பேரைவீட்டில் இருக்கச் சொல்லிவிட்டேன். ஓட்டுநர்களை வரவேண்டாம், அவசர உதவி தேவை என்றால் மட்டும் அழைக்கிறேன் என சொல்லிவிட்டேன். உடற்பயிற்சி அளிப்பவர் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார். காலையில் அப்பா உடற்பயிற்சி செய்வார். மாலையில் நடைப்பயிற்சி செல்வார். மாலையில் மட்டும் நான் உடற்பயிற்சி செய்வேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE