பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்

By செய்திப்பிரிவு

பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி என்று துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆடுஜீவிதம்'. இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, சில முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது படக்குழு.

ஆனால், அந்தச் சமயத்தில் தான் கரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் தொற்றுக் கொண்டது. ஜோர்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் மூலம் படப்பிடிப்பு குழுவின் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறியப்பட்டது. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜோர்டன் அரசின் புதிய முடிவால், இந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய வெளிநாட்டு நடிகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழு பாலைவனத்தில், ஒரு கூடாரத்தில் நாட்களைக் கடத்தி வருகிறது. மேலும், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் தங்களது படக்குழுவினரை மீட்டுச் செல்ல உதவுமாறு இயக்குநர் ப்ளெஸ்ஸி கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் கேரள முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, உருக்கமான பதிவொன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ப்ருத்விராஜ். இந்தப் பதிவு முக்கிய நடிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் பதிவுத் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நீங்களும் உங்கள் குழுவினரும் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி. விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு வந்து சேர உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். இது துரதிருஷ்டவசமானது, கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக உணவும், பொருட்களும் தீர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அனைத்தும் சரியாகும் என்று நம்புவோம்"

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE