சமுத்திரக்கனி மீம்கள், ஹேஷ்டேகுகளை விடுத்து, இதைக் கொண்டு செல்லுங்கள்: இயக்குநர் ரத்னகுமார் காட்டம்

சமுத்திரக்கனி மீம்கள், ஹேஷ்டேகுகளை விடுத்து, இதைக் கொண்டு செல்லுங்கள் என்று இயக்குநர் ரத்னகுமார் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று மேலும் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தபோது, சமூக வலைதளத்தில் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து வந்தார்கள்.

கரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து இருப்பது குறித்து 'ஆடை' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்களே.. போலிச் செய்திகளைப் பரப்புவதையும் சமுத்திரக்கனி பெயரில் மீம்கள், ஹேஷ்டேகுகள் உருவாக்குவதையும் விடுத்து இதை அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். இதை மூன்றாம் கட்டத்துக்கு எடுத்துச் செல்லாமல் இருப்போம்".

இவ்வாறு இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE