'ஸ்டார் வார்ஸ்' நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கரோனா தொற்றால் மரணம்

By ஐஏஎன்எஸ்

'ஸ்டார் வார்ஸ்' படத்தில் நடித்தவரும், பிரபல நடிகர்களின் பேச்சு வழக்குப் பயிற்சியாளருமான ஆண்ட்ரூ ஜாக் கரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 76.

ஆண்ட்ரூ பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் பிரதிநிதி ஜில் மெக்கல்லா தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூ தேம்ஸ் நதியில். பயன்பாட்டில் இருக்கும் படகு வீடுகளில் ஒன்றில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ஆண்ட்ரூவின் மனைவி கேப்ரியலும் நடிகர்களுக்கான பேச்சு வழக்குப் பயிற்சியாளராக உள்ளார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரூ மறைவைப் பற்றி ட்வீட் செய்துள்ள கேப்ரியல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்ட்ரூவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் சாகும்போது வலியின்றி, தனது குடும்பத்தினர் தன்னுடன் இருக்கின்றார்கள் என மன நிம்மதியுடன் உயிர் பிரிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'ஸ்டார் வார்ஸ் தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' இயக்குநர் ஜே.ஜே.ஆப்ராம்ஸ், வெளியாகவுள்ள 'பேட்மேன்' படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் ஆகியோர் ஆண்ட்ரூ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'ஸ்டார் வார்ஸ்' எபிசோட் 8 தி லாஸ்ட் ஜெடை', 'ஸோலோ எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி', 'ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7 தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்' ஆகிய படங்களில் ஜெனரல் எமாட் என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ நடித்திருந்தார். ராபர்ட் டவுனி ஜூனியர், க்றிஸ் ஹெம்ஸ்வர்த் உள்ளிட்ட நடிகர்களுக்குப் பேச்சு வழக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். வெளியாகவுள்ள 'பேட்மேன்' படத்திலும் பேச்சு வழக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் ஆண்ட்ரூ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE