10 நாளாச்சு; பேரன் முகத்தைக் கூட பார்க்கவில்லை: சாருஹாசன் வேதனை

10 நாளாச்சு. பேரன் முகத்தைக் கூட பார்க்கவில்லை என்று சாருஹாசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கரோனா வைரஸ் அச்சத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அனைவருமே சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், சிலர் கரோனா பரிசோதனையும் செய்து கொண்டனர்.

இதில் மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தனின் செயல் இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏனென்றால், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய நந்தன் கரோனா முன்னெச்சரிக்கையாகத் தன்னைத் தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இன்றுடன் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு 11 நாட்கள் ஆகின்றன. தனிமையில் இருக்கும் மகனுடன் சுஹாசினி பேசும் வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தனது பேரன் தனிமைப்படுத்திக் கொண்டது தொடர்பாக நடிகர் சாருஹாசன், "என் பேரன் நந்தன் லண்டனிலிருந்து வந்தால், தாத்தா என்று என்னைப் பார்க்கத்தான் வருவான். இப்போது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தைக் கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்” என்று தெரிவித்துள்ளார்.

சாருஹாசன் பேசியுள்ள வீடியோவையும், நந்தன் தனிமைப்படுத்திக் கொண்ட வீடியோ பதிவையும் இணைத்து, தமிழக அரசு கரோனா விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சுஹாசினி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE