கரோனா வைரஸுக்கு மதம் இல்லை: குஷ்பு சாடல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பை மத ரீதியாகச் சித்தரிக்க முயல்பவர்களை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் சாடியுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,397 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதனிடையே, மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதை வைத்து முஸ்லிம்களால்தான் அதிகம் கரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூ கவலைதளத்தில் பலரும் கருத்துகளை வெளியிடத் தொடங்கினார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சில முட்டாள்கள் கோவிட்-19 வைரஸை ஒரு சமூகப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரஸுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக் கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்கவும்.

எல்லா மதக் கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது."

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE