வைரஸை விட மோசமான விஷயமாக மாற்றாதீர்கள்: 'மான்ஸ்டர்' இயக்குநர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, இணையத்தில் அதிகரித்த இந்து - முஸ்லிம் வாதத்தை இயக்குநர் நெல்சன் கண்டித்துள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,397 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இதனிடையே, மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால்தான் அதிகம் கரோனா பரவுகிறது என்று கூறி மதரீதியாகப் பலரும் கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். இது ட்விட்டர் தளத்தில் பெரும் விவாதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக 'மான்ஸ்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நிஜாமுதீன் மசூதி மாநாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்து - முஸ்லிம் பிரச்சினை உருவாக்கப்படுவது மிகவும் வருத்தமான விஷயம். ஏற்கெனவே சமூக வலைதளங்கள் வெறுப்பால் நிறைந்துள்ளன. ஜிஹாதி வைரஸ் போன்ற வார்த்தைகள் மூலம் வைரஸை விட மோசமான விஷயமாக மாற்றாதீர்கள். இந்த நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களும் இந்து - முஸ்லிம் பிரச்சினையாக இருக்க வேண்டியதில்லை. ப்ளீஸ்".

இவ்வாறு நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE