சிக்கலில் 'ஆடுஜீவிதம்' படக்குழு: மீட்கக் கோரி இயக்குநர் கடிதம்; ப்ருத்விராஜ் உருக்கமான பதிவு

ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வந்த 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தங்களை மீட்கக் கோரி இயக்குநர் ப்ளெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ப்ருத்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

'ஆடுஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் வாடி ரம் பாலைவனப் பகுதியில் நடந்து வந்தது. நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்று வளைகுடா நாட்டுக்குச் செல்லும் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்ற கதாபாத்திரத்தின் கதையே 'ஆடுஜீவிதம்'. அங்கு செல்லும் நஜீப் கொத்தடிமையாக்கப்பட்டு, வெவ்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டு இறுதியில் தனது அடிமை வாழ்க்கையிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளே இந்தப் படத்தின் கதை.

கரோனா அச்சத்தால் பல்வேறு நடவடிக்கைகளைச் சந்தித்தது படக்குழு. ஜோர்டானில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் மூலம் படப்பிடிப்பு குழுவின் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறியப்பட்டது. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்ததால், படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஒமன் நாட்டைச் சேர்ந்த நடிகர் டாக்டர் தலீப் அல் பலூஷியும், அவரது மொழிபெயர்ப்பாளரும், இன்னொரு நடிகரும் ஜோர்டானிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழு பாலைவனத்தில், ஒரு கூடாரத்தில் நாட்களைக் கடத்தி வருகிறது.

தற்போது படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டு ரத்தானதால் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள திரைப்படச் சங்கத்துக்கு, தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை கேரள திரைப்படச் சங்கம் அம்மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ள நடிகர் ப்ருத்விராஜ், "எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு முறை அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கிறார். மேலும், ஜோர்டான் அரசாங்கம் நியமித்துள்ள மருத்துவரும் அவ்வப்போது எங்களைப் பரிசோதிக்கிறார்.

தற்போது உலகில் இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. அது சரியும் கூட. எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு நடப்பது என்ன என்பதைத் தெரிவிப்பது எங்கள் கடமை என்று நினைத்தோம்.

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். அதுவரை, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து, மீண்டும் வாழ்க்கை சகஜமாக மாறும் என்று நம்புவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE