தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிப் பணியாளர்களுக்கு இயக்குநர் ரோஹித் ஷெட்டி நிதியுதவி அளித்துள்ளார்.

கோவிட்-19 பாதிப்பால் இந்தியாவின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு துறையின் தினக்கூலிப் பணியாளர்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் அடங்கும்.

தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து வகையான படப்பிடிப்புகளும் ரத்தாகியுள்ளன. இதனால் அனைத்துத் தயாரிப்புகளும் முடங்கியுள்ளன. எனவே, துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்தந்த மாநில மொழியைச் சேர்ந்த திரைப்படம் சார்ந்த சங்கங்கள் பல வகையில் நிதி திரட்டி உதவி வருகின்றன. பல்வேறு திரைக் கலைஞர்கள் இதற்காக நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, மேற்கிந்தியத் திரை ஊழியர்கள் கூட்டமைப்புக்கு ரூ.51 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் அசோக் பண்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது பொழுதுபோக்குத் துறையின் தினக்கூலிப் பணியாளர்களுக்காக... உங்கள் தாராள உதவிக்கு நன்றி ரோஹித் ஷெட்டி. ரூ.51 லட்சம் உங்களின் மிகப்பெரிய பங்களிப்பு, இதுபோன்ற நேரங்களில் உந்துதலைத் தருகிறது" என்று பகிர்ந்துள்ளார்.

ரோஹித் ஷெட்டியைப் போன்றே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் தங்களால் ஆன நிதியுதவியைச் செய்து வருகின்றனர். அண்மையில் நடிகர் அக்‌ஷய் குமார், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE