பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்: கரோனா பாதித்த நடிகர் வெளியிட்ட வீடியோ

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்படப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர். அவ்வப்போது இதிலிருந்து மீண்டவர்கள் பற்றிய செய்திகள் வந்தாலும் கரோனாவால் மரணித்தவர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா ஹாங்கஸ், நடிகை ஓல்கா குரிலென்கோ, ‘தோர்’ நடிகர் இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களும் கூட கரோனா பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இதில் டாம் ஹாங்க்ஸ் ரீடா ஹாங்க்ஸ் இருவரும் கரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இட்ரிஸ் எல்பா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (01.04.20) ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நாங்கள் நன்றாக இருக்கிறோம். எந்த அறிகுறியும் இல்லை. தனிமைக் காலத்தைக் கடந்துவிட்டோம். ஆனாலும் எங்களால் இங்கிருந்து வெளியே செல்ல இயலாது. இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டிய நிலை. இந்த தருணத்தில் பிறருக்கு உதவி செய்பவர்கள், குறிப்பாக செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார நிலைய ஊழியர்கள் அனைவரும் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பொருளாதாரச் சிக்கல்களை அனைவருமே எதிர்கொள்ளப் போகிறோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும். இது மிகவும் கடினமான காலகட்டமாக இருக்கப்போகிறது. ஆனால், மனம் வருந்த வேண்டாம். எல்லாம் சரியாகி விடும்''.

இவ்வாறு இட்ரிஸ் எல்பா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE