பெண்கள் மேடையேறி வெளிச்சம் பெறத் தொடங்கியுள்ளனர்: மனிஷா கொய்ராலா

By பிடிஐ

பெண்கள் மேடையேறி வெளிச்சம் பெற ஆரம்பித்துவிட்டனர் என்று மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு 'சவுதகர்' என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. அதற்குப் பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு நேபாளி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், திரையுலகிலிருந்து விலகி சுமார் 6 ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது முற்றிலுமாக குணமாகி, மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 1990-களில் திரையுலகில் நடிக்க வந்தது குறித்தும், ஆண் - பெண் சமநிலை குறித்து மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"80-களில் ஆரம்பித்து 90-கள் வரை, நான் 10-15 படங்களில் சில நல்ல இயக்குநர்களின் படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இது எப்போதுமே கிடைக்காது. எனக்கு வந்த வாய்ப்புகளில் என்னால் ஆன சிறந்த நடிப்பைக் கொடுத்தேன். ஒரு பெரிய நாயகன் இருக்கும்போது தயாரிப்பில் பணம் போடத் தயாராக இருப்பார்கள். இதுதான் யதார்த்தம்.

ஆண்-பெண் நடிகர்களுக்கு இடையே சமநிலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதற்கு இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அந்த நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. திரைப்படத் தயாரிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். கடந்த காலத்தில் இப்படி இருந்ததில்லை.

எனவே, மெதுவாகக் காலம் மாறி வருகிறது. பெண்கள் மேடையேறி வெளிச்சம் பெற ஆரம்பித்துவிட்டனர், ஆனால் மொத்தமாக முன்னேறி அந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று நினைத்தால் அது மாயை. சமமான மரியாதையும், நிலையும் கிடைக்க நாம் இன்னமும் முயல வேண்டும்".

இவ்வாறு மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE