டிடி தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சக்திமான், சாணக்யா

'சக்திமான்', 'சாணக்யா' ஆகிய தொடர்கள் மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இந்த நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த, பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும் அடுத்தடுத்து திரைப்படங்கள், பிரபலமான பழைய தொடர்கள் என ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு 90-களில் மிகப் பிரபலமான 'ராமாயணம்' தொடரை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து மற்ற பிரபலமான தொடர்களையும் ஒளிபரப்ப மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

எனவே தற்போது ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 'சக்திமான்' மற்றும் 'சாணக்யா' தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தொடர் 'சக்திமான்'. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்று அறியப்படும் 'சக்திமான்' செப்டம்பர் 1997-ம் ஆண்டு ஆரம்பித்து மார்ச் 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார்.

பின்னர் இந்தத் தொடர் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. சந்திரகுப்த மௌரிய அரசரின் ஆலோசகராக இருந்த் சாணக்கியரின் கதையைச் சொல்லும் 47 பகுதிகள் கொண்ட 'சாணக்யா' தொடரும் 90-களில் பிரபலம்.

இந்த இரண்டு தொடர்களும் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களில் ஷாரூக் கான் நடித்திருந்த 'சர்க்கஸ்' என்ற தொடரும் டிடியில் மறு ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE